அவினாசிபாளையம் வினோபாநகரில் குடிநீர் வசதி கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் கலெக்டரிடம் மனு


அவினாசிபாளையம் வினோபாநகரில் குடிநீர் வசதி கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 1 Aug 2017 3:15 AM IST (Updated: 1 Aug 2017 12:49 AM IST)
t-max-icont-min-icon

அவினாசிபாளையம் வினோபாநகரில் குடிநீர் வசதி கேட்டு காலிக்குடங்களுடன் வந்து பெண்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், பொங்கலூர் ஒன்றியம் தெற்கு அவினாசிபாளையம் ஊராட்சி வினோபாநகர் பகுதியை சேர்ந்த 50–க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

எங்கள் பகுதியில் 1,200–க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. எங்கள் பகுதிக்கு கூட்டுக்குடிநீர் திட்டம் மூலமாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆழ்குழாய் கிணறு மூலமாக தண்ணீர் கிடைத்தது. இந்தநிலையில் வறட்சி காரணமாக ஆழ்குழாய் கிணற்றில் தண்ணீர் வற்றி விட்டது. இதனால் தண்ணீர் கிடைக்காமல் சிரமம் அடைந்து வருகிறோம். மேலும் தற்போது கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் மாதம் ஒருமுறை ஒரு வீட்டுக்கு 10 குடம் தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது. இதன்காரணமாக கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எங்கள் பகுதிக்கு குடிநீர் மற்றும் தண்ணீர் வசதி செய்து கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர்.

பட்டம்பாளையம் பகுதியை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் ஆரம்ப பள்ளி மற்றும் குழந்தைகள் மையம் உள்ளன. ஆரம்ப பள்ளிக்கும், குழந்தைகள் மையத்துக்கும் குடிநீர் வசதி இல்லாததால் குழந்தைகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். பள்ளிக்கு அருகில் உள்ள சாக்கடை கால்வாய் சுத்தம் செய்யாமல் உள்ளதால் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. எங்கள் பகுதியில் கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

பட்டம்பாளையம் ஊராட்சியில் ஆழ்குழாய் கிணறு மூலமாக கிடைத்த நீர் தற்போது கிடைக்கவில்லை. இதனால் குடிநீர் இல்லாமல் மிகவும் சிரமம் அடைந்து வருகிறோம். குடிநீருக்காக 1 கிலோ மீட்டர் தூரம் சென்று குடிநீர் பிடித்து வருகிறோம். எங்கள் பகுதியில் 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் கிடைக்க வசதி செய்து கொடுக்க வேண்டும். அதுபோல் பொன்னேகவுண்டன்வலசு, மேட்டுப்பாளையம், கோணாபுரம் பகுதிகளில் குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர்.

பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்ட மங்கலம் கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தினர் அளித்த மனுவில், திருப்பூர் தெற்கு தாலுகா பகுதியில் உள்ள ஆண்டிபாளையம் குளம் 56 ஏக்கர் பரப்பளவை கொண்டது. இந்த குளத்துக்கு அருகே உள்ள நல்லம்மன் தடுப்பணையில் இருந்து வாய்க்கால் மூலமாக இந்த குளத்துக்கு தண்ணீர் வருகிறது. சுமார் 3½ கிலோ மீட்டர் தூரம் உள்ள வாய்க்கால் மண், புதர்களால் மூடப்பட்டுள்ளது. இந்த வாய்க்காலை சீரமைத்தால் தண்ணீர் வரும்போது குளம் நிறையும். இதை செய்து கொடுக்க வேண்டும்.

ஆண்டிபாளையம் குளம் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த குளத்தில் இருந்து ஏற்கனவே விவசாயிகள் மண் எடுத்தனர். தற்போது ஆண்டிபாளையம், மங்கலம், இடுவாய், வீரபாண்டி போன்ற பகுதியை சேர்ந்த 300–க்கும் மேற்பட்ட விவசாயிகள் மண் எடுக்க திருப்பூர் தெற்கு தாசில்தார் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். எனவே பதிவு செய்த விவசாயிகளுக்கு மண் அள்ள அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

திருப்பூர் மாநகராட்சி 59–வது வார்டு, 60–வது வார்டு பகுதியை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் தனியார் ஒருவர் கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறுகளில் மின்மோட்டார் பொருத்தி தண்ணீரை லாரிகளுக்கு விற்பனை செய்து வருகிறார். இதனால் சக்திநகர், ஆண்டிப்பாளையம், தன்வர்ஷினி அவென்யூ பகுதிகளில் நிலத்தடி நீர் குறைந்து விட்டது. எனவே லாரிகளுக்கு தண்ணீர் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

ஊத்துக்குளி தாலுகா புஞ்சை தளவாய்பாளையத்தை சேர்ந்த விவசாயிகள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் உள்ள குளத்தில் தூர்வாரும் பணி பாதியில் நிற்கிறது. இதனால் மழை பெய்யும் போது மழைநீர் மதகு பகுதிக்கு வராமல் பாதியிலேயே நின்று விடும். விவசாயமும் பாதிக்கப்படும். எனவே குளத்தை முழுமையாக தூர்வார வேண்டும். தேவைப்படுபவர்களுக்கு வண்டல் மண் அள்ள அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

சாமளாபுரம் வேலாயுதம்பாளையம் அருந்ததியர் காலனியை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் ஒரே வீட்டில் இரண்டு குடும்பங்கள் வசித்து வருகிறது. இடவசதியில்லாததால் நத்தம் புறம்போக்கு நிலத்தில் சமையல் அறை அமைத்து கடந்த 40 ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறோம். ஆனால் இதை காலி செய்யுமாறு சிலர் தங்களிடம் மனு கொடுத்துள்ளனர். எங்கள் பயன்பாட்டில் உள்ள இடத்தை காலி செய்யாமல் இருக்க உதவி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.


Next Story