காப்பீட்டு தொகை வழங்கக்கோரி வேளாண்துறை இணை இயக்குனர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
காப்பீட்டு தொகை வழங்கக்கோரி புவனகிரி வேளாண்துறை இணை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புவனகிரி,
புவனகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி கிராமங்களை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த பயிர்களுக்கு காப்பீட்டு தொகை செலுத்தி இருந்தனர். இந்த நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக சாகுபடி செய்த பயிர்கள் அனைத்தும் தண்ணீர் இன்றி கருகி சேதமடைந்தது.
இதனால் பாதிக்கப்பட்ட புவனகிரி, ஆதிவராகநத்தம், பு.உடையூர், வடகிருஷ்ணாபுரம், கீழ்புவனகிரி, மஞ்சக்கொல்லை ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சார்பில் இதுவரை காப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை என தெரிகிறது. இதுகுறித்து விவசாயிகள், வேளாண்துறை அதிகாரிகளை அணுகி கேட்டதற்கு, அவர்கள் உரிய பதில் அளிக்கவில்லை எனக்கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் புவனகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் இருக்கும் வேளாண்துறை இணை இயக்குனர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் வேளாண்துறை இணை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி அறிந்து வந்த வேளாண்துறை இணை இயக்குனர் இளவரசன், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் காப்பீட்டு தொகை வழங்குவது குறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையேற்ற விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.