குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் வந்த கிராம மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு
குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் வந்த கிராம மக்கள், கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுத்தனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் டி.ஜி.வினய் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள், கோரிக்கைகள் தொடர்பான மனு கொடுத்தனர். அந்த மனுக்களை பெற்று, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர் உத்தரவிட்டார்.
இந்த கூட்டத்தில் அம்பாத்துரை ஊராட்சி பெருமாள்கோவில்பட்டியை சேர்ந்த மக்கள் கடந்த வாரம் குடிநீர் கேட்டு மனு கொடுத்தனர். இந்த நிலையில் நேற்று மீண்டும் குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் மனு கொடுக்க வந்தனர். அப்போது அவர்கள், கூட்டமாக கலெக்டர் அலுவலக வாசலை நோக்கி வந்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பின்னர் சமாதானம் அடைந்த கிராம மக்கள், கலெக்டரிடம் குடிநீர் கேட்டு மனு கொடுத்தனர்.
அதுபற்றி கிராம மக்கள் கூறுகையில், எங்கள் கிராமத்தில் குடிநீர் மட்டுமின்றி பிற பயன்பாட்டுக்கான தண்ணீர் வசதியும் முறையாக செய்து தரப்படவில்லை. தினமும் டிராக்டரில் கொண்டு வரப்படும் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகிறோம். இந்த நிலையில் ஊராட்சி சார்பில் ஆழ்துளை கிணறு அமைக்க இடம் தேர்வு செய்தும், அமைக்கப்படவில்லை. எனவே, உடனடியாக ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வழங்க வேண்டும். மேலும் சாலை, பொதுக்கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் செய்து தரவேண்டும் என்றனர்.
வேடசந்தூர் தாலுகா மாரம்பாடி ஊராட்சி தேவகவுண்டன்பட்டி ஏ.டி. காலனியை சேர்ந்த மக்கள், காலிக்குடங்களுடன் வந்து குடிநீர் கேட்டு மனு கொடுத்தனர். அதுபற்றி கிராம மக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் கடந்த 6 மாதமாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை. 10 நாட்களுக்கு ஒருமுறை 5 குடம் குடிநீர் கிடைக்கிறது. ஆழ்துளை கிணற்றில் பொருத்தி இருந்த மோட்டார் பழுதானது. அதை பழுது பார்க்க எடுத்து சென்றனர். ஆனால், இதுவரை மோட்டாரை பொருத்தவில்லை. எனவே, மின்மோட்டாரை மீண்டும் பொருத்தி முறையாக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும், என்றனர்.
மேலும் சாணார்பட்டி அருகேயுள்ள ராகலாபுரத்தை சேர்ந்த மக்கள் குடிநீர் கேட்டு 2–வது முறையாக வந்து மனு கொடுத்தனர். அதில், குடிநீருக்காக பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகிறோம். கடந்த வாரம் மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. குடிநீர் வழங்க துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.
திண்டுக்கல் மாநகராட்சி 18, 30–வது வார்டுகளை சேர்ந்த மக்கள் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுத்தனர். அதில், திண்டுக்கல் மென்டோன்சா காலனி, கிழக்கு ஆரோக்கியமாதா தெரு இணையும் பகுதியில் மெங்கில்ஸ் சாலையில் மதுக்கடை அமைக்கப்பட இருப்பதாக தெரிகிறது. அந்த இடத்தின் அருகில் 4 பள்ளிகள் உள்ளன. எனவே, அந்த இடத்தில் மதுக்கடை அமைக்காமல் தடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.
அதேபோல் கன்னிவாடி அருகே ஆடலூரில் உள்ள மதுக்கடையை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி ஆடலூர், கே.சி.பட்டி, பெரியூர் பகுதிகளை சேர்ந்த மக்கள் மனு கொடுத்தனர். இவர்கள் கடந்த வாரமும் இதே கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுத்தது குறிப்பிடத்தக்கது. மேலும் தாண்டிக்குடியை சேர்ந்த மக்கள் அந்த பகுதியில் உள்ள மதுக்கடையை அகற்றக்கோரி மனு கொடுத்தனர்.
பெரும்பாறை பன்றிமலையை சேர்ந்த கருணாகரன் என்பவர் கொடுத்த மனுவில், கன்னிவாடி பகுதியில் அனுமதி இல்லாமல் மரங்கள் வெட்டி கடத்தப்படுகின்றன. இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.
மேலும் திண்டுக்கல் மாவட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்க தலைவர் ராஜூ தலைமையில், முன்னாள் ராணுவ வீரர்கள் கோஷமிட்டபடி வந்து மனு கொடுத்தனர். அதில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவால் திண்டுக்கல் மீனாட்சிநாயக்கன்பட்டியில் செயல்பட்டு வந்த கேண்டீனில் மதுவிற்பனை நிறுத்தப்பட்டது. இதனால் முன்னாள் ராணுவ வீரர்கள் பிற மாவட்ட கேண்டீன்களுக்கு செல்ல வேண்டியது இருக்கிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.