குன்றத்தூர் அருகே கோவில் உண்டியலை உடைத்து திருடிய சிறுவன் கைது
குன்றத்தூர் அருகே கோவில் உண்டியலை உடைத்து திருடிய சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
பூந்தமல்லி,
குன்றத்தூரை சேர்ந்தவர் சிவகுமார்(வயது 42). ஆட்டோ டிரைவர். நேற்று முன்தினம் நள்ளிரவு நந்தம்பாக்கம் வழியாக குன்றத்தூர் நோக்கி ஆட்டோவில் சென்றார். அப்போது 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் அவரது ஆட்டோவை மறித்து குன்றத்தூர் செல்ல வேண்டும் என்று கூறினான்.
சிவகுமாரும், சிறுவனை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு குன்றத்தூர் நோக்கி சென்றார். அவனது கையில் சிறிய சாக்கு மூட்டை ஒன்று இருந்தது. குன்றத்தூரில் இறங்கிய அவன், சிவகுமாருக்கு கொடுக்க அந்த மூட்டையில் இருந்து பணத்தை எடுக்க முயன்றான்.
அப்போது தூரமாக போலீசார் ரோந்து சென்றதை பார்த்து பயந்து போன அவன், அந்த மூட்டையை ஆட்டோவில் போட்டு விட்டு தப்பி ஓடிவிட்டான். இதனால் அதிர்ச்சி அடைந்த சிவகுமார், அந்த மூட்டையை பிரித்து பார்த்த போது அதில் ரூபாய் நோட்டுகளும், சில்லரைகளும் இருப்பதை கண்டு திடுக்கிட்டார்.
போலீசில் ஒப்படைப்பு
இதையடுத்து அவர், அந்த மூட்டையை குன்றத்தூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து நடந்த விவரங்களை கூறினார். அதில் இருந்த பணத்தை போலீசார் எண்ணிப் பார்த்த போது, மொத்தம் ரூ.26 ஆயிரத்து 200 இருந்தது. அந்த சிறுவன் யார்?, இந்த பணம் அவனிடம் எப்படி வந்தது? என குன்றத்தூர் போலீசார் விசாரித்து வந்தனர்.
இதற்கிடையில் நந்தம்பாக்கத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் உள்ள உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டதாக அந்த பகுதி பொதுமக்கள், குன்றத்தூர் போலீசில் புகார் செய்தனர். அப்போதுதான் அந்த சிறுவன், அந்த கோவிலில் திருடியது போலீசாருக்கு தெரிய வந்தது.
கைது
இந்தநிலையில் குன்றத்தூர் கரைமா நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டு இருந்த ஒரு சிறுவனை சந்தேகத்தின்பேரில் பிடித்து போலீசார் விசாரித்தனர். ஆட்டோ டிரைவர் சிவகுமாரும், அவன்தான் தனது ஆட்டோவில் வந்தான் என்பதை உறுதி படுத்தினார்.
இதையடுத்து குன்றத்தூர் போலீசார் அந்த சிறுவனை கைது செய்து விசாரித்தனர். அதில் அவன், சோமங்கலம் அடுத்த நடுவீரப்பட்டு பகுதியை சேர்ந்தவன் என்பது தெரிந்தது.
செலவுக்கு பணம் இல்லை
தனது தந்தைக்கு உடல் நலம் சரி இல்லாததால் சிகிச்சை செலவுக்கும், குடும்ப செலவுக்கும் பணம் இல்லாமல் திண்டாடிய அவன், பணத்துக்கு என்ன செய்வது என யோசித்து கொண்டு இருந்தான்.
நேற்று முன்தினம் நந்தம்பாக்கம் பகுதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடி திருவிழா முடிந்து கோவிலை பூட்டி விட்டு எல்லோரும் சென்று விட்டனர். கோவில் உண்டியலில் பக்தர்கள் அதிக அளவில் காணிக்கை செலுத்தி இருப்பார்கள் என்பதால் இரவில் கோவில் சுவரை ஏறி உள்ளே குதித்து உண்டியலை உடைத்து பணத்தை திருடி விட்டு ஆட்டோவில் சென்ற போது போலீசார் வந்து விட்டதால் பயத்தில் அந்த பண மூட்டையை ஆட்டோவில் வீசி விட்டு தப்பி ஓடிவிட்டான் என்பது அவனிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
அந்த பணத்தை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர் சிவகுமாரை போலீசார் பாராட்டினர்.
Related Tags :
Next Story