புதுவையில் இருந்து பெங்களூரு, திருப்பதிக்கு விமான சேவை தொடங்கப்படும்


புதுவையில் இருந்து பெங்களூரு, திருப்பதிக்கு விமான சேவை தொடங்கப்படும்
x
தினத்தந்தி 1 Aug 2017 5:00 AM IST (Updated: 1 Aug 2017 1:41 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் இருந்து பெங்களூரு, திருப்பதிக்கும் விமான சேவை தொடங்கப்படும் என்று அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் கூறினார்.

புதுச்சேரி,

புதுச்சேரி மாநிலத்தில் இருந்து வருகிற 16–ந் தேதி முதல் விமான சேவை தொடங்கப்பட உள்ளது. இந்த நிலையில் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நேற்று மாலை லாஸ்பேட்டையில் உள்ள விமான நிலையத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அவருடன் தலைமை செயலாளர் மனோஜ் பரிதா, போக்குவரத்து ஆணையர் சுந்தரேசன் மற்றும் அதிகாரிகள் சென்றனர். ஆய்வுக்கு பின்னர் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நிருபர்களிடம் கூறியதாவது:–

புதுவையில் இருந்து வருகிற 16–ந் தேதி முதல் விமான சேவை தொடங்கப்பட உள்ளது. அன்று காலை 11.30க்கு புதுச்சேரியில் இருந்து ஐதராபாத்திற்கு விமான சேவை தொடங்கப்பட உள்ளது. தனியார் விமான நிறுவனம் புதுச்சேரியில் இருந்து ஐதராபாத்திற்கு வாரம் 7 நாட்களும் விமானம் இயக்கப்பட உள்ளது. இந்த விமானம் தினமும் காலை 11.20க்கு ஐதராபாத்தில் இருந்து புதுச்சேரி வந்தடையும். பின்னர் 11.40க்கு புதுச்சேரியில் இருந்து ஐதராபாத்திற்கு புறப்படும்.

இந்த திட்டத்தின் மூலம் விமானத்தில் ஒரு மணிநேரம் பயணிக்க ரூ.2,444 கட்டணம் வசூலிக்கப்படும். ஐதராபாத்திற்கு விமானத்தில் செல்ல 1 மணிநேரம் 10 நிமிடம் ஆகும். எனவே கட்டணம் சுமார் ரூ.3 ஆயிரம் இருக்கும். முதல் நாள் விமானத்தில் வந்து இறங்குபவர்களுக்கும், புதுச்சேரியில் இருந்து செல்பவர்களுக்கும் அரசு சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்படும். முன்பு போல் இல்லாமல் தொடர்ந்து விமான சேவை நடத்தப்படும்.

விமான நிலையத்தில் சுற்றுலா தகவல் மையம், உணவகம் அமைக்கப்படும். பிரிபெய்டு வாகன வசதி ஏற்படுத்தப்படும். அடுத்த கட்டமாக புதுவையில் இருந்து பெங்களூரு, திருப்பதி, கோவை ஆகிய ஊர்களுக்கு விமான சேவை தொடங்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். விமான நிலைய விரிவாக்கத்திற்கு தமிழகத்திடம் இருந்து 65 ஏக்கர் நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட உள்ளது.

இது குறித்து, மத்திய மந்திரியை சந்தித்து பேச உள்ளேன். தமிழக முதல்–அமைச்சர் மற்றும் அமைச்சர்களிடமும் பேசுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story