மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கி தருவதாக கூறி நகை கடை அதிபரிடம் மோசடி செய்தவர் கைது


மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கி தருவதாக கூறி நகை கடை அதிபரிடம் மோசடி செய்தவர் கைது
x
தினத்தந்தி 1 Aug 2017 5:00 AM IST (Updated: 1 Aug 2017 1:59 AM IST)
t-max-icont-min-icon

மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கி தருவதாக கூறி நகை கடை அதிபரிடம் ரூ.40 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவான பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பெ.நா.பாளையம்,

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஆனந்தா நகரை சேர்ந்தவர் புருஷோத்தமன் (வயது 48). இவரது மனைவி அம்சவேணி (43). இவர்களது மகள் ஹரிப்ரியா (19). அம்சவேணி எல்.எம்.டபுள்யூ பிரிவில் நகை கடை நடத்தி வருகிறார். சென்னை தியாகராய நகரை சேர்ந்தவர் சபரி (35). இவரது மனைவி விலாஷினி.

இந்த இரு குடும்பத்தினருக்கும் இடையே வியாபார ரீதியாக சில வருடங்களாக நட்பு இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2014–ம் ஆண்டு அம்சவேணி தனது மகளை மருத்துவ படிப்பு (எம்.பி.பி.எஸ்.) படிக்க வைப்பதற்காக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரிக்கு சென்றார்.

பின்னர் புருஷோத்தமன் மகளை கல்லூரியில் சேர்க்க சென்னையில் இருந்த சபரியின் குடும்பத்தினரிடம் உதவிகேட்டுள்ளார். அதற்கு அவர்கள் ரூ.60 லட்சம் கொடுத்தால் அங்குள்ள மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கி தருவதாக உறுதி அளித்தனர். இதை உண்மை என நம்பிய அம்சவேணி, சபரியிடம் ரூ.60 லட்சம் கொடுத்தார்.

பின்னர் 6 மாதங்கள் கடந்தும் அவர்கள் மருத்துவ கல்லூரியில் படிக்க இடம் வாங்கி தரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அம்சவேணி, சபரி குடும்பத்தினருடன் தான் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு கேட்டார். அதில் ரூ.20 லட்சத்தை திருப்பி கொடுத்ததாக கூறப்படுகிறது. மீதி ரூ.40 லட்சத்தை தவணை முறையில் கொடுத்து விடுவதாக 2 காசோலைகளை கொடுத்துள்ளனர்.

அந்த காசோலைகளை வங்கியில் கொடுத்த போது வங்கி கணக்கில் பணம் இல்லை என்று வங்கி பணியாளர் தெரிவித்துள்ளார். இதையடுத்து சபரியிடம் பணத்தை தருமாறு அம்சவேணி கேட்டுள்ளார். ஆனால் பணத்தை திருப்பி கொடுக்காமல் மிரட்டல் விடுத்து வந்துள்ளார்.

இந்த மோசடி குறித்து அம்சவேணி கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சபரி மற்றும் விலாஷினி ஆகியோர் மீது புகார் கொடுத்தார். புகாரின் பேரில் உயர் அதிகாரிகள் பெரியநாயக்கன்பாளையம் போலீசாரை விசாரணை நடத்த உத்தரவிட்டனர். பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையில் கடந்த 29–ந்தேதி சபரியை போலீசார் சென்னையில் மடக்கி பிடித்து கைது செய்து, பெரியநாயக்கன்பாளையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் சபரி கோவை கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு, மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதனை தொடர்ந்து போலீசார் தலைமறைவாக இருக்கும் விலாஷினியை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story