கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம்: குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கோரி பெண்கள் மனு
குடிநீர் தட்டுப்பாட்டை போக்கக் கோரி ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில், பெண்கள் மனு கொடுத்தனர்.
ஊட்டி,
ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். இதில் நடைபாதை, சாலை, குடிநீர், முதியோர் உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மனு கொடுத்தனர். அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கூட்டத்தில், ஊட்டி அருகே உள்ள கடநாடு ஊராட்சி பட்டக்கொரை கிராமத்தை சேர்ந்த பெண்கள் கொடுத்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:–
எங்களது பகுதிக்கு பைக்காரா கூட்டு குடிநீர் திட்டம் மூலம் வழங்கப்பட்டு வந்த குடிநீர் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் எங்களது கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதன் காரணமாக 2 கி.மீ. தூரம் நடந்து சென்று குடிநீர் எடுத்து வர வேண்டி உள்ளது. கடந்த 5 மாதங்களுக்கு முன்பு எங்கள் கிராமத்தில் போட்ட ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் வருவது இல்லை.
எனவே மீண்டும் எங்களுக்கு பைக்காரா குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வேறு இடத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து தேவையான குடிநீரை வழங்கி தட்டுப்பாட்டை போக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கூடலூர் தேவாலா வாளவயல் பகுதியை சேர்ந்த மாணவி இலக்கியா, அவருடைய சகோதரர் கவியரசன் ஆகியோர் கலெக்டரிடம் அளித்த மனுவில், நான் வாளவயல் அரசு பள்ளியில் 6–ம் வகுப்பும், எனது சகோதரர் கவியரசன் தேவாலா அரசு பள்ளியில் 9–ம் வகுப்பும் படித்து வருகிறோம். எங்களது தந்தை திருப்பூரில் கூலி வேலை செய்து வருகிறார். எங்களது வீட்டிற்கு பட்டா இல்லாததால் மின்வாரிய அதிகாரிகள் எங்களுக்கு மின்இணைப்பு தர வில்லை.
இதனால் நாங்கள் இரவில் படிக்க முடியாமல் அவதிப்படுகிறோம். நன்றாக படிக்கும் நாங்கள், விளையாட்டு போட்டிகளிலும் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் பெற்று உள்ளோம். எனவே எங்கள் நிலையை கருத்தில் கொண்டு வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
எப்பநாடு கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை உறுப்பினர்கள் அளித்த மனுவில், தேயிலை வாரியம் சார்பில் எங்களது தொழிற்சாலைக்கு ரூ.30 லட்சம் மானியம் வழங்கப்பட்டது. அந்த தொகையை இது வரை உறுப்பினர்களுக்கு பிரித்து வழங்க வில்லை. இதற்கு நடவடிக்கை எடுத்து உறுப்பினர்களுக்கு உரிய பணம் கிடைக்க செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
கல்லூரி மாணவி சீதா அளித்த மனுவில், நான் பிதிர்காடு பகுதியில் உள்ள ஊட்டி அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்.சி. இயற்பியல் 2–ம் ஆண்டு படித்து வருகிறேன். தற்போது எனக்கு அரசு விடுதியில் தங்குவதற்கு அனுமதி கிடைக்கவில்லை. இதனால் தனியார் விடுதிகளில் அதிக கட்டணம் செலுத்தி தங்கி படிக்க முடியாது. மேலும் கூடலூரில் இருந்து தினசரி பஸ்சில் வந்து படிக்க முடியாத நிலை உள்ளது. எனவே எனக்கு அரசு மகளிர் தங்கும் விடுதியில் இடம் கிடைக்கநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.