குன்னூரில் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை தலைமை சங்க அலுவலகம் முற்றுகை


குன்னூரில் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை தலைமை சங்க அலுவலகம் முற்றுகை
x
தினத்தந்தி 1 Aug 2017 3:45 AM IST (Updated: 1 Aug 2017 2:07 AM IST)
t-max-icont-min-icon

குன்னூரில் உள்ள கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை தலைமை சங்க அலுவலகம் முற்றுகையிடப் பட்டது. மேலும் இன்று முதல் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்து உள்ளனர்.

குன்னூர்,

நீலகிரி மாவட்டத்தில் சிறு தேயிலை விவசாயிகள் பயன் பெறும் வகையில் 15 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் உள்ளன. இவைகளின் தலைமை அலுவலகமான இன்கோசர்வ் அலுவலகம் குன்னூரில் செயல்பட்டு வருகிறது. கூட்டுறவு தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு மற்றும் சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இது தொடர்பாக பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை மற்றும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால் இன்னும் முடிவு எட்டப்பட வில்லை. எனவே போராட்ட குழு சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கு போலீசார் அனுமதி கொடுக்க வில்லை.

இந்த நிலையில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ஆல்தொரை, ஏ.ஐ.டி.யு.சி. சங்க மாவட்ட செயலாளர் போஜராஜ் மற்றும் காந்தி ஆகியோர் தலைமையில் இன்கோசர்வ் அலுவலகம் முன் தொழிலாளர்கள் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி அளிக்க வில்லை என்று கூறினர். இதனால் போலீசாருக்கும், போராட்ட குழுவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

உடனே இன்கோசர்வ் அலுவலகத்தின் வாசல் கதவு மூடப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த தொழிலாளர்கள் அந்த அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தொழிற்சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டனர். அப்போது, பொதுமேலாளர் அக்பர் மற்றும் அதிகாரிகள், 10 நாட்களுக்குள் இந்த பிரச்சினையில் சுமுக தீர்வு காண்பதாக கூறினர்.

இதை தொழிற்சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் மத்தியில் கூறினர். அதை ஏற்க தொழிலாளர்கள் மறுத்து விட்டனர். மேலும் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டது.


Next Story