நிதி நிறுவன அதிபரை தாக்கி ரூ.10 லட்சம் பறிக்க முயன்ற 3 பேர் கைது


நிதி நிறுவன அதிபரை தாக்கி ரூ.10 லட்சம் பறிக்க முயன்ற 3 பேர் கைது
x
தினத்தந்தி 1 Aug 2017 3:45 AM IST (Updated: 1 Aug 2017 2:42 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் நிதி நிறுவன அதிபரை தாக்கி ரூ.10 லட்சம் பறிக்க முயன்றது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கோவில்பட்டி,

மதுரை பழங்காநத்தம் பசும்பொன் நகரைச் சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 37). தனியார் நிதி நிறுவன அதிபரான இவர், வங்கிகளில் அடமானம் வைக்கப்பட்ட நகைகளை மீட்டு மறுவிற்பனை செய்து கமிஷன் பெறும் தொழிலும் நடத்தி வருகிறார். இவருடைய நிதி நிறுவனத்தில் சிவகாசியைச் சேர்ந்த சந்திர ஆகாஷ் (27) வேலை செய்து வருகிறார். இவரும், சிவகாசியைச் சேர்ந்த ஜெகன்குமாரும் நண்பர்கள். கடந்த 25-ந் தேதி ஜெகன்குமாரை செல்போனில் தொடர்பு கொண்ட ஒருவர், 100 பவுன் நகை அடகு வைக்கப்பட்டுள்ளதாகவும், அதனை மீட்டு மறு விற்பனை செய்ய வேண்டும் எனவும், அதற்காக ரூ.10 லட்சம் கேட்டார்.

ரூ.10 லட்சத்தை எடுத்துக் கொண்டு பாலமுருகன், சந்திர ஆகாஷ், ஜெகன்குமார் ஆகிய 3 பேரும் கோவில்பட்டி வந்தனர். அங்குள்ள ஒரு வீட்டில் பாலமுருகன் அமர்ந்து இருந்த போது காரில் வந்த 6 பேர் பாலமுருகனை தாக்கி அவரிடம் இருந்த 2 செல்போன்களை பறித்து விட்டு சென்றனர். சந்திர ஆகாஷ், ஜெகன்குமார் ஆகியோரிடம் ரூ.10 லட்சம் இருந்ததால் அந்த பணம் தப்பியது. இது குறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

3 பேர் கைது

இந்த நிலையில் கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் ஆலோசனையின்பேரில், மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்- இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது கோவில்பட்டி பாண்டவர்மங்கலம் பஸ் நிறுத்தத்தில் சந்தேகப்படும்படியாக நின்ற 3 பேரிடம் விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் மதுரை மீனாட்சிபுரம் வைகைநகர் 2-வது தெருவைச் சேர்ந்த பாண்டி மகன் முருகபாண்டி (30), ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கீழமுடிமண் கிராமத்தைச் சேர்ந்த காசி (47), உப்பிலிபட்டியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (50) என்பதும், இவர்கள் பாலமுருகனிடம் இருந்து ரூ.10 லட்சத்தை பறிக்க முயன்றவர்கள் என்பதும் தெரிய வந்தது. எனவே முருகபாண்டி, காசி, ராதாகிருஷ்ணன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 2 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

6 பேருக்கு வலைவீச்சு

முருகபாண்டி என்பவர்தான் கார்த்திகேயன் என்ற பெயரில், கோவில்பட்டி ராஜீவ் நகர் 3-வது தெருவில் கடந்த 25-ந்தேதி வாடகைக்கு வீடு எடுத்து உள்ளார். பின்னர் அவர் அன்றைய தினமே தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பாலமுருகனிடம் பணம் பறிக்க ஏற்பாடு செய்து உள்ளார். இதுதொடர்பாக மேலும் 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கைதான முருக பாண்டி, காசி, ராதாகிருஷ்ணன் ஆகிய 3 பேரையும் போலீசார் கோவில்பட்டி 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

Related Tags :
Next Story