செம்பூரை சேர்ந்த சிறுமி மலேரியா காய்ச்சலுக்கு பலி


செம்பூரை சேர்ந்த சிறுமி மலேரியா காய்ச்சலுக்கு பலி
x
தினத்தந்தி 1 Aug 2017 3:38 AM IST (Updated: 1 Aug 2017 3:38 AM IST)
t-max-icont-min-icon

செம்பூரை சேர்ந்த சிறுமி மலேரியா காய்ச்சலுக்கு பலியானாள்.

மும்பை,

மும்பையில் மழைக்கால நோயால் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. இந்தநிலையில், செம்பூரை சேர்ந்த மிலின் மோரே என்பவரது 13 வயது மகள் ருதுஜா என்ற சிறுமி கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தாள். பெற்றோர் அவளை அங்குள்ள மாநகராட்சி மருத்துவமனையில் சேர்த்து இருந்தனர். டாக்டர்கள் பரிசோதனையில் அவள் மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. டாக்டர்கள் அவளுக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் திடீரென அவளது உடல் நிலை மிகவும் மோசமானது. இதையடுத்து டாக்டர்கள் அவளை சயான் மருத்துவமனையில் சேர்க்கும்படி பரிந்துரை செய்தனர்.

சிறுமி சாவு

இதையடுத்து உடனடியாக அவளை நேற்றுமுன்தினம் இரவு சயான் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சைக்கு அனுமதித்த சிறிது நேரத்திலேயே அவள் பரிதாபமாக உயிரிழந்தாள்.

இந்தநிலையில், செம்பூர் மாநகராட்சி மருத்துவமனை டாக்டர்களின் அலட்சியம் காரணமாகவே ருதுஜா இறந்ததாக அவளது குடும்பத்தினர் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளனர். இதை டாக்டர்கள் மறுத்து உள்ளனர். நோய் தாக்கம் தீவிரமான பின்னர் தாமதமாக சிறுமியை சிகிச்சைக்கு அழைத்து வந்ததாக டாக்டர்கள் கூறினர். இந்த மழைக்காலத்தில் மலேரியா காய்ச்சலுக்கு ஏற்பட்ட முதல் உயிரிழப்பு இதுவாகும். 

Next Story