ஜாகிர் நாயக்கின் உதவியாளருக்கு ஜாமீன் வழங்கியதை எதிர்த்து மனு


ஜாகிர் நாயக்கின் உதவியாளருக்கு ஜாமீன் வழங்கியதை எதிர்த்து மனு
x
தினத்தந்தி 1 Aug 2017 3:42 AM IST (Updated: 1 Aug 2017 3:42 AM IST)
t-max-icont-min-icon

மதபோதகர் ஜாகிர் நாயக்கின் உதவியாளருக்கு ஜாமீன் வழங்கியதை எதிர்த்து ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்ய அமலாக்கத்துறை முடிவு செய்து உள்ளது.

மும்பை,

சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் பயங்கரவாதத்தை ஊக்குவித்ததாகவும், மும்பையில் அவருக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக நிதி கிடைத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. வெளிநாட்டில் இருக்கும் ஜாகிர் நாயக்கிற்கு இது தொடர்பாக அமலாக்க பிரிவினர் சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் இதுவரையிலும் நாடு திரும்பவில்லை.

இதற்கிடையே கடந்த பிப்ரவரி மாதம் அவரது நெருங்கிய உதவியாளரும், அவருக்கு சொந்தமான சில நிறுவனங்களின் இயக்குனருமான அமீர் கஜ்தார்(வயது50) என்பவரிடம் அமலாக்க பிரிவினர் விசாரணை நடத்தினர்.

மனு தாக்கல் செய்ய முடிவு

பின்னர் அவர் பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். தனக்கு ஜாமீன் கேட்டு அமீர் கஜ்தார் சிறப்பு கோர்ட்டில் கடந்த ஏப்ரல் 20-ந் தேதி மனு தாக்கல் செய்தார். அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை கடந்த மாதம் நடந்தது. அப்போது அமீர் கஜ்தாருக்கு நீதிபதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

அமீர் கஜ்தாருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை எதிர்த்து அமலாக்கத்துறை மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்ய முடிவு செய்து இருக்கிறது. அவரது ஜாமீனை ரத்து செய்ய கோரும் அமலாக்கத்துறையின் மனு விரைவில் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் என அமலாக்கத்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

Next Story