எம்.எல்.ஏ. விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு


எம்.எல்.ஏ. விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 1 Aug 2017 3:44 AM IST (Updated: 1 Aug 2017 3:44 AM IST)
t-max-icont-min-icon

மும்பை நரிமன்பாயிண்டில் உள்ள எம்.எல்.ஏ. விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மும்பை, 

மராட்டிய சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் மும்பையில் நடந்து வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக மாநிலத்தின் அனைத்து தொகுதி எம்.எல்.ஏ.க்களும் மும்பையில் முகாமிட்டு உள்ளனர். இவர்களில் 158 எம்.எல்.ஏ.க்கள் நரிமன்பாயிண்டில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் (மனோரா) தங்கியிருக்கிறார்கள்.

விடுதியின் ‘டி’ பிரிவு கட்டிடத்தில் உள்ள அறை எண் 125 தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. சதீஷ் பாட்டீலுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.

மேற்கூரை இடிந்தது

இந்தநிலையில், நேற்று காலை அவரது அறையில் உள்ள மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இடிபாடுகள் அவரது படுக்கையில் சிதறி கிடந்தன. அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் சதீஷ் பாட்டீல் எம்.எல்.ஏ. அந்த அறையில் தங்கியிருக்கவில்லை. இதன் காரணமாக அவர் தப்பினார். பின்னர், அவர் தனது அறைக்கு வந்தபோது மேற்கூரை இடிந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். எம்.எல்.ஏ. விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மறுசீரமைப்பு

இந்தநிலையில், நேற்று சட்டசபை கூடியதும் இந்த பிரச்சினையை எதிர்க்கட்சி தலைவர் ராதாகிருஷ்ண விகே பாட்டீல் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர் அஜித்பவார் ஆகியோர் எழுப்பினர்.

அஜித்பவார் கூறுகையில், “எம்.எல்.ஏ.க்களுக்கு உடனடியாக மாற்று தங்குமிட வசதியை அரசு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். இல்லையெனில் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ஏற்பாட்டில் தங்கி கொள்வதற்கு மாதம் ரூ.1 லட்சம் வாடகை தொகை தர வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

இதற்கு பதில் அளித்த முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், “எம்.எல்.ஏ.க்களுக்கு மாற்று தங்குமிடம் ஏற்படுத்தி கொடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் விடுதியில் தங்க விரும்பாத எம்.எல்.ஏ.க்களுக்கு வாடகை தொகை வழங்குவது பற்றியும் பரிசீலிக்கப்படும்” என்றார்.

அத்துடன், எம்.எல்.ஏ.க்கள் விடுதி மோசமான நிலையில் இருப்பதை ஒப்புக்கொண்ட அவர், இதனை மறுசீரமைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார். 

Next Story