ஓமலூர் அருகே மதுக்கடையை மூடக்கோரி பொதுமக்கள் திடீர் சாலைமறியல்


ஓமலூர் அருகே மதுக்கடையை மூடக்கோரி பொதுமக்கள் திடீர் சாலைமறியல்
x
தினத்தந்தி 1 Aug 2017 11:20 AM IST (Updated: 1 Aug 2017 11:20 AM IST)
t-max-icont-min-icon

ஓமலூர் அருகே அரசு மதுபானக்கடையை மூடக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதற்கு போட்டியாக மதுபிரியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஓமலூர்,

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த காருவள்ளி சின்ன திருப்பதியில் அரசு மதுக்கடை உள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இந்த மதுக்கடையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் 3 மாதங்களுக்குள் இந்த மதுக்கடை இடமாற்றம் செய்யப்படும் என்று உறுதி அளித்தனர்.

இந்த நிலையில் அதிகாரிகள் உறுதி அளித்தபடி 3 மாதங்கள் ஆகியும் கடை இடம் மாற்றம் செய்யப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று காலையில் அந்த மதுக்கடை முன்பு திரண்டனர். அங்கு மதுக்கடையை மூட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன், கடை முன்பு ஓமலூர்-கொங்குபட்டி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும், காடையாம்பட்டி தாசில்தார் ராஜேஷ்குமார் மற்றும் வருவாய்த்துறையினர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த போராட்டம் சுமார் அரை மணி நேரம் நடந்த தகவலை கேள்விப்பட்டு மதுபிரியர்கள் மதுக்கடையை இடமாற்றம் செய்யக்கூடாது என்று வலியுறுத்தி போட்டி ஆர்ப்பாட்டம் நடத்த மதுக்கடை முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் மதுக்கடை வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். அவர்களும் சாலை மறியலில் சுமார் அரை மணி நேரம் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் கிடைத்து அங்கு வந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு கூறினர். அதன்பேரில் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

ஒரே நாளில் மதுக்கடைக்கு எதிர்ப்பாகவும், ஆதரவாகவும் நடைபெற்ற போராட்டம் காரணமாக அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story