கலெக்டரிடம் மனு அளிக்க ஏர் கலப்பையுடன் வந்த விவசாயிகள்


கலெக்டரிடம் மனு அளிக்க ஏர் கலப்பையுடன் வந்த விவசாயிகள்
x
தினத்தந்தி 1 Aug 2017 7:00 PM IST (Updated: 1 Aug 2017 3:53 PM IST)
t-max-icont-min-icon

கோவை மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்க விவசாயிகள் ஏர் கலப்பையை தூக்கி வந்தனர்.

கோவை,

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. தமிழ்நாடு விவசாய சங்கத்தலைவர் பழனிச்சாமி தலைமையில் விவசாயிகள் கலெக்டர் ஹரிகரனிடம் மனு அளிக்க வந்தனர். அப்போது அவர்கள் ஏர் கலப்பையை மாடுகள் போன்று இழுத்து வந்தனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது:-

தமிழகத்தில் விவசாயிகளுக்கான பயிர் காப்பீட்டு திட்டத்தில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்க கூடாது என்று விவசாயிகள் நாடு முழுவதும் போராடி வருகிறார்கள். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன் பெறும் விவசாயிகளை கட்டாயப்படுத்தி இந்த காப்பீட்டு திட்டத்தில் வங்கி அதிகாரிகள் இணைந்து வருகின்றனர். தனியார் நிறுவனங்களை அனுமதிக்காமல் தேசியமயமாக்கப்பட்ட காப்பீட்டு நிறுவனங்கள் மூலமே பயிர் காப்பீட்டு வழங்க உத்தரவிட வேண்டும்.

ஏற்கனவே விவசாயிகள் வாங்கிய கடனை வசூலிக்க தனியார் நிறுவனங்கள் அடியாட்கள் மூலம் வசூலிக்கிற முறையினை வங்கிகள் கைவிட வேண்டும். மாடுகளை வைத்து பராமரிக்க கூட விவசாயிகளுக்கு வசதியில்லாத காரணத்தால் இனி ஆட்களை வைத்து தான் வயல்களை உழ வேண்டும். அந்த அளவுக்கு விவசாயிகளின் ஏழ்மை நிலை உள்ளது என்பதை எடுத்துக்காட்டுவதற்காகத் தான் மாடுகளுக்கு பதில் 2 பேர் ஏர்கலப்பையை இழுத்து வந்தனர்.

கோவை மாவட்டத்தில் விவசாயிகளின் பெரும் சவாலாக உள்ள சீமைக்கருவேல மரங்கள், பார்த்தீனிய செடிகளின் ஆதிக்கத்தால் விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது ஐகோர்ட்டு புதிய உத்தரவு மூலம் மீண்டும் நீர்நிலைகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அழிப்பதற்கு உத்தரவு வந்துள்ளது. இடைக்கால தடையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே கோவை மாவட்டத்தில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றும் உத்தரவை அமல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story