4 ஆட்டோக்கள்– மோட்டார் சைக்கிள் தீயில் எரிந்து நாசம் மர்ம நபர்களின் கைவரிசையா?


4 ஆட்டோக்கள்– மோட்டார் சைக்கிள் தீயில் எரிந்து நாசம் மர்ம நபர்களின் கைவரிசையா?
x
தினத்தந்தி 2 Aug 2017 4:30 AM IST (Updated: 1 Aug 2017 10:27 PM IST)
t-max-icont-min-icon

தக்கலை அருகே 4 ஆட்டோக்கள், மோட்டார் சைக்கிள் தீயில் எரிந்து நாசமாயின. இது மர்ம நபர்களின் கைவரிசையா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தக்கலை,

குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள வாழ்வச்சகோஷ்டம் பூச்சிக்காட்டுவிளையை சேர்ந்தவர் அனீஷ் (வயது30). இவரது சகோதரர்கள் சபின், ஷாஜி. இவர்கள் 3 பேரும் ஆட்டோ ஓட்டி வருகிறார்கள். இவர்களிடம் 2 பயணிகள் ஆட்டோக்களும், 2 லோடு ஆட்டோக்களும் உள்ளன. நேற்று முன்தினம் இரவில் 4 ஆட்டோக்களையும் வீட்டின் அருகே நிறுத்திவிட்டு தூங்க சென்றனர்.

நள்ளிரவில் அந்த ஆட்டோக்கள் திடீரென தீப்பிடித்து மளமளவென எரிந்தன. சத்தம் கேட்டு அனீசும், அவரது சகோதரர்களும் வெளியே ஓடி வந்து பார்த்தனர்.

அவர்கள் ஆட்டோக்கள் தீயில் எரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையே அக்கம் பக்கத்தினரும் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் அனைவரும் சேர்ந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்குள் ஆட்டோக்கள் எரிந்து நாசமடைந்தன. மேலும், அருகில் நின்ற மோட்டார் சைக்கிளும் எரிந்து சேதம் அடைந்தது.

இதுகுறித்து தக்கலை போலீஸ் நிலையத்தில் அனீஷ் புகார் கொடுத்தார்.

அந்த புகாரில், மர்ம நபர்கள் ஆட்டோவுக்கு தீவைத்து எரித்ததாக கூறியிருந்தார். அந்த புகாரின் பேரில் மர்ம நபர்களின் கைவரிசையா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story