தண்ணீர் தேடி வந்தபோது சென்னை ரெயிலில் அடிபட்டு 5 புள்ளி மான்கள் பலி
பாணாவரம் அருகே தண்ணீர் தேடி வந்தபோது சென்னை ரெயிலில் அடிபட்டு 5 புள்ளிமான்கள் பலியாகின.
வேலூர்,
வேலூர் மாவட்டம் பாணாவரத்தில் உள்ள காப்புக்காட்டில் வாழும் புள்ளிமான்கள், வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அடிக்கடி தண்ணீர் தேடி அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கு வருகின்றன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தண்ணீர் தேடி பாணாவரத்தில் உள்ள ரெயில் நிலையம் அருகே புள்ளிமான்கள் கூட்டமாக வந்தன. அப்போது அந்த வழியாக பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி வந்த ரெயிலில் அடிபட்டு 5 புள்ளிமான்கள் இறந்தன.
இதில் இறந்த ஒரு பெண் புள்ளிமான் சினையாக இருந்தது. ரெயிலில் சிக்கியபோது அதன் வயிற்றில் இருந்த பெண் குட்டியும் வெளியே விழுந்து இறந்தது.
தகவல் அறிந்த வனத்துறை ஊழியர்கள், பலியான புள்ளிமான்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாணாவரம் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர், காப்புக்காட்டில் மான்களின் உடல்கள் புதைக்கப்பட்டன.
தண்ணீர் தேடி செல்லும் புள்ளிமான்கள் அடிக்கடி ரெயிலில் அடிபட்டு பலியாவதால் காப்புக்காடு பகுதியில் மான்களுக்கு தண்ணீர் தொட்டி வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.