தந்தையின் 2-வது மனைவிக்கு கத்திக்குத்து: 1½ மாத பெண் குழந்தை அடித்துக்கொலை


தந்தையின் 2-வது மனைவிக்கு கத்திக்குத்து: 1½ மாத பெண் குழந்தை அடித்துக்கொலை
x
தினத்தந்தி 2 Aug 2017 2:00 AM IST (Updated: 2 Aug 2017 12:20 AM IST)
t-max-icont-min-icon

தந்தையின் 2-வது மனைவியை கத்தியால் குத்திய வாலிபர், அவர்களுக்கு பிறந்த 1½ மாத பெண் குழந்தையை தரையில் அடித்து கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றார்.

ஸ்ரீவைகுண்டம்,

தந்தையின் 2-வது மனைவியை கத்தியால் குத்திய வாலிபர், அவர்களுக்கு பிறந்த 1½ மாத பெண் குழந்தையை தரையில் அடித்து கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றார்.

2-வது திருமணம்


தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே உள்ள நாட்டார்குளத்தை சேர்ந்தவர் செல்லப்பாண்டி (வயது 50). இவர் கேரள மாநிலத்தில் வடை கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி வண்டி மலைச்சி. இவர்களுடைய மகன் வண்டி மலையான் (21). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு செல்லப்பாண்டிக்கும், வண்டி மலைச்சிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனால் செல்லப்பாண்டி, வல்லநாடு அருகே பாறைக் காடு கிராமத்தை சேர்ந்த ராஜேசுவரியை (38), 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நந்தினி என்ற 1½ மாத பெண் குழந்தை இருந்தது. பின்னர் செல்லப்பாண்டி நாட்டார்குளத்தில் உள்ள தன்னுடைய வீட்டுக்கு செல்லாமல், பாறைக்காட்டில் உள்ள ராஜேசுவரியின் வீட்டுக்கு சென்று வந்தார்.

குழந்தை அடித்துக்கொலை

கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள மாநிலத்தில் இருந்து செல்லப்பாண்டி பாறைக்காடு கிராமத்துக்கு வந்தார். அவர் தன்னுடைய 2-வது மனைவி மற்றும் குழந்தையை பார்த்து விட்டு நேற்று காலை கேரளா புறப்பட்டு சென்றார்.

தனது தந்தை 2-வது திருமணம் செய்தது வண்டி மலையானுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. நேற்று மதியம் வண்டி மலையான், ராஜேசுவரியின் வீட்டுக்கு சென்று அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 1½ மாத பச்சிளம் குழந்தை நந்தினியை தூக்கி தரையில் அடித்துக்கொலை செய்தார். இதைப்பார்த்த ராஜேசுவரி அலறி துடித்தார்.

தீவிர சிகிச்சை

இருப்பினும் ஆத்திரம் தீராத அவர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராஜேசுவரியை சரமாரியாக குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். உடனே வண்டி மலையான் அங்கிருந்து தப்பிச்சென்றார்.

இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் முறப்பநாடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜேசுவரியை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான வண்டி மலையானை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story