கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் விதிமுறைகளை மீறி குளம் தூர்வாரும் பணி விவசாயிகள் குற்றச்சாட்டு
கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் விதிமுறைகளை மீறி குளம் தூர்வாரும் பணி நடைபெறுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
கம்பம்,
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரின் மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள சுமார் 14 ஆயிரத்து 707 ஏக்கர் விவசாய நிலங்களில் இருபோக நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் வீரப்பநாயக்கன்குளம், ஒடப்படி, ஒட்டுக்குளம் ஆகிய குளங்களில் தண்ணீர் தேக்கப்பட்டு விவசாயத்துக்கு பயன்பட்டு வருகிறது. தற்போது போதிய பருவமழை பெய்யாததால் அணையின் நீர்மட்டம் உயரவில்லை. மேலும் குளங்கள், கண்மாய்கள் தண்ணீரில்லாமல் வறண்டு காணப்படுகிறது. இதனால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இருபோக நெல் சாகுபடியும் கைவிடப்பட்டது.
இந்த நிலையில் மழைக்காலங்களில் அதிக நீரை தேக்கும் வகையில் குளங்களை தூர்வாரவேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கலெக்டர் வெங்கடாசலத்திடம் கோரிக்கை விடுத்தனர். அதன்படி குளங்களை தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டது. அதில் வண்டல் மண்ணை விவசாயிகள் தங்கள் தேவைக்கு பயன்படுத்தி கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒடப்படி குளத்தில் தூர்வாரும் பணி தொடங்கியது.
இந்த குளத்தில் பொக்லைன் எந்திரம் மூலம் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. இதில் அரசின் விதிமுறைகளை மீறி அதிக ஆழத்துக்கு தோண்டப்பட்டு வண்டல் மண்ணை எடுத்து வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். ஒடப்படி குளம் ஆழமாக்கப்படுவதால் மழைக்காலங்களில் தண்ணீரை தேக்கினாலும், அதனை மதகு வழியாக வெளியேற்ற முடியாமல் போய்விடும். மேலும் குளத்தை தூர்வாரும் பணியின் போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் யாரும் இல்லாததால் ஆங்காங்கே வண்டல் மண்ணை அள்ளுகின்றனர்.
இதனால் குளத்தின் பல இடங்கள் பெரிய அளவில் பள்ளங்களாக காட்சி அளிக்கின்றன. எனவே குளம் தூர்வாரும் பணியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்யவேண்டும். மேலும் முழுமையாக அரசின் விதிமுறைகளை பின்பற்றவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.