கோவையில் வாலிபர் வெட்டி படுகொலை: தலை, கை,கால்களை தனித்தனியாக துண்டித்து சாக்குமூட்டையில் கட்டி வீச்சு
கோவையில் வாலிபர் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தலை, கை, கால்களை தனித்தனியாக துண்டித்து சாக்குமூட்டையில் கட்டி கழிவுநீர் ஓடையில் வீசப்பட்டது.
கோவை,
கோவை புலியகுளத்தில் இருந்து சவுரிபாளையம் செல்லும் சாலையில் கழிவு நீர் ஓடை செல்வதற்கான பாலம் உள்ளது. இந்த பாலத்தின் அடியில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அந்த வழியாக சென்றவர்கள் நேற்று மாலை 5 மணிக்கு பாலத்தின் அடிப்பகுதிக்கு சென்று பார்த்தனர். அப்போது வெள்ளை நிறத்திலான பிளாஸ்டிக் சாக்கு மூட்டையில் உள்ளே ஏதோ சுற்றி வைக்கப்பட்டநிலையில் கிடந்தது.
அதில் இருந்து துர்நாற்றம் வந்ததால் சந்தேகம் அடைந்தவர்கள் இதுகுறித்து கோவை ராமநாதபுரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.போலீசார் விரைந்து வந்து மூட்டையை அவிழ்த்து பார்த்தனர்.
வாலிபர் ஒருவரின் உடல் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் உடல் பாகம் மட்டும் தனியாக இருந்தது. அதன் அருகில் சிறிதாக மற்றொரு பிளாஸ்டிக் சாக்குமூட்டையும் கிடந்தது. அதனை அவிழ்த்து பார்த்தபோது அதில் தலை மட்டும் தனியாக சுற்றி வைக்கப்பட்டு இருந்தது. முகம் அடையாளம் தெரியாத அளவுக்கு அழுகிய நிலையில் கிடந்தது.
கொலை செய்யப்பட்ட வாலிபரின் உடலில் இருந்து கை, கால்களும் துண்டிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அந்த பாகங்கள் அங்கு இல்லை.போலீஸ் உதவி கமிஷனர்கள் ரமேஷ் கிருஷ்ணன், சுரேஷ் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
கொலை செய்யப்பட்டவருக்கு 35 வயது இருக்கும். வேறு பகுதியில் வைத்து வெட்டி படுகொலை செய்து சாக்குமூட்டையில் கட்டி கழிவு நீர் ஓடையில் வீசிச்சென்று இருக்கலாம் என்றும், இந்த கொலை 10 நாட்களுக்கு முன்பு நடைபெற்று இருக்கலாம் என்று சந்தேகப்படுவதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிக்பாக்கெட் ஆசாமிகள், முன்னாள் குற்றவாளிகள் இடையே நடைபெற்ற முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்று இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. கோவையில் காணாமல் போனவர்கள் யார்? என்ற பட்டியலின் அடிப்படையில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
கொலை செய்யப்பட்டவரின் கை,கால்கள் கழிவு நீர் ஓடையில் கிடக்கிறதா? என்றும் போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.
சவுரிபாளையம் சாலையில் எப்போதும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். அந்த பகுதியில் சாக்கு மூட்டையில் வாலிபரை கொன்று வீசிச்சென்று இருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
போலீசார் உடல்களின் பாகங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து கோவை ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.