கார் மெக்கானிக் கொலை வழக்கில் 2 பேர் கைது
தேவகோட்டையில் கார் மெக்கானிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். முன்விரோதத்தில் கொலை செய்ததாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
தேவகோட்டை,
தேவகோட்டை பழைய சருகணி சாலையில் கார் மெக்கானிக் கடை வைத்து நடத்தி வருபவர் பொன்னையா. இவருடைய மகன் செந்தில்நாதன்(வயது 30). திருமணமாகவில்லை. இவர் தனது தந்தை கடையிலேயே கார் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று அருணாகிரிபட்டினத்தில் கார் ஒன்றின் பழுதை சரிசெய்வதற்காக செந்தில்நாதன் சென்றார். பின்னர் அங்கிருந்து கடைக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்துக்கொண்டிருந்தார். அவருடன், கடையில் உதவியாளராக வேலை செய்து வரும் சூர்யா(19) என்பவரும் வந்தார்.
தேவகோட்டை சேக்கப்பன் தெரு வழியாக இரவுசேரி பாதை என்ற இடத்தில் அவர்கள் வந்தபோது, அப்பகுதியில் மறைந்திருந்த மர்ம நபர்கள் செந்தில்நாதனை வழிமறித்தனர். பின்னர் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதனை தடுக்க சென்ற சூர்யாவுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. பின்னர் அந்த நபர்கள் தப்பி சென்றுவிட்டனர். அரிவாளால் வெட்டப்பட்ட செந்தில்நாதன் சம்பவ இடத்திலேயே இறந்துபோனார்.
இதுகுறித்து தேவகோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளை வலைவீசி தேடி வந்தனர். விசாரணையில் தேவகோட்டை சோக்கப்பன் தெருவை சேர்ந்த முருகன் என்பவருக்கு கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவருக்கு உடந்தையாக அவரது உறவினர் கண்ணதாசன் என்பவரும் இருந்துள்ளார். அதன்பேரில் போலீசார் தங்களது விசாரணையை முடுக்கிவிட்டனர். ஆனால் போலீசார் தேடுவதை அறிந்த முருகன் உள்பட 2 பேரும் மதுரை பகுதியில் பதுங்கினர். போலீசாருக்கு மதுரையில் கொலையாளிகள் பதுங்கியிருப்பது ரகசிய தகவலாக கிடைத்தது. இதனையடுத்து போலீசார் மதுரை விரைந்தனர்.
இந்தநிலையில் மதுரை பாண்டி கோவில் பகுதியில் பதுங்கியிருந்த கொலையாளிகள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை தேவகோட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். முன்விரோதத்தில் இந்த கொலை நடந்திருப்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் தரப்பில் கூறப்பட்டதாவது:–
சேக்கப்பன் தெருவில் வசிப்பவர் தங்கராஜ் மகன் முருகன்(37). கொத்தனாராக வேலை பார்க்கும் இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஏற்கனவே திருமணமாகி கணவனை பிரிந்த ஒரு பெண்ணுக்கும் தொடர்பு இருந்துள்ளது. இதனால் முருகன், அந்த பெண்ணை கொலை செய்யப்பட்ட செந்திலின் கார் மெக்கானிக் கடை அருகில் வாடகைக்கு வீடு பிடித்து குடும்பம் நடத்தி வந்தார். அப்போது அந்த பெண்ணுக்கும், செந்திலுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது முருகனுக்கு தெரியவரவே இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துவந்துள்ளது.
இந்தநிலையில் தான் சம்பவத்தன்று முருகன், தனது உறவினர் கண்ணதாசன்(36) என்பவரை துணைக்கு அழைத்துக் கொண்டு அருணகிரிபட்டினத்தில் கார் பழுதாகி நிற்பதாகவும், அதை சரிசெய்து தர வரும்படி செந்திலை அழைத்துள்ளார். பின்னர் செந்திலை வழிமறித்து கொலை செய்துள்ளார்.
பின்னர் கைது செய்யப்பட்ட 2 பேரையும் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், தேவகோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றவாளிகளை 15 நாள் கோர்ட்டு காவலில் வைக்க உத்தரவிட்டார்.