தேவிபட்டினம் அருகே மனைவியை கொலை செய்தவர் மகனுடன் கைது
தேவிபட்டினம் அருகே நடத்தையில் சந்தேகம் அடைந்து மனைவியை கொலை செய்த கணவனும், அதனை மூடிமறைத்த மகனும் கைது செய்யப்பட்டனர்.
பனைக்குளம்,
தேவிபட்டினம் அருகே உள்ளது புல்லங்குடி. இந்த ஊரைச்சேர்ந்தவர் சண்முகம் (வயது 49). இவரின் முதல் மனைவி இறந்துவிட்டதால் கனகா(45) என்பவரை 2–வதாக திருமணம் செய்து கொண்டார்.. சண்முகம் குடும்பத்தினருடன் புல்லங்குடி அருகே நெடுஞ்சாலை ஓரத்தில் கரிமூட்டம் போட்டு பிழைப்பு நடத்தி வந்தார்.
இந்தநிலையில் கனகாவின் நடத்தையில் சண்முகத்திற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 24–ந்தேதி கரிமூட்டம் பகுதியில் வைத்து சண்முகத்திற்கும் கனகாவிற்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த சண்முகம் அங்கிருந்த விறகு கட்டையால் கனகாவின் தலையில் தாக்கியுள்ளார். இதனால் கனகா ரத்தவெள்ளத்தில் மயங்கி விழுந்துள்ளார். இந்த சத்தம் கேட்டு அருகில் வேலை பார்த்து கொண்டிருந்த சண்முகத்தின் மகன் பிரவீன்(28) அங்கு ஓடிவந்து தந்தையிடம் விவரம் கேட்டுள்ளார். இதனை தொடர்ந்து தந்தையும், மகனும் சேர்ந்து கனகாவை ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். கீழே விழுந்து படுகாயமடைந்து விட்டதாக கூறி அனுமதித்துள்ளனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கனகா குணமடைந்து வீட்டிற்கு வந்த நிலையில் நேற்று முன்தினம் இறந்துவிட்டார்.
இதுபற்றி அறிந்த தேவிபட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான போலீசார் சந்தேக மரணமாக கருதி விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் நடத்தையில் சந்தேகம் அடைந்து சண்முகம் மனைவியை கொலை செய்ததும், அதுபற்றி அறிந்தும் போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் உடந்தையாக இருந்து மகன் பிரவீன் கொலையை மூடிமறைத்ததும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து கனகா இறந்த சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்து மனைவியை கொலை செய்த சண்முகத்தையும், சம்பவத்தை மூடிமறைத்த குற்றத்திற்காக மகன் பிரவீனையும் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் கைது செய்தார். இவர்கள் இருவரும் திருவாடானை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.