தெற்கு விஜயநாராயணம் மேத்தபிள்ளையப்பா தர்கா கந்தூரி விழா திரளான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர்
தெற்கு விஜயநாராயணம் மேத்தபிள்ளையப்பா தர்கா கந்தூரி விழா நடந்தது. இதில் திரளான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர்.
இட்டமொழி,
தெற்கு விஜயநாராயணம் மேத்தபிள்ளையப்பா தர்கா கந்தூரி விழா நடந்தது. இதில் திரளான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர்.
மேத்தபிள்ளையப்பா தர்காநெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா இட்டமொழி அருகே தெற்கு விஜயநாராயணத்தில் மேத்தபிள்ளையப்பா தர்கா அமைந்துள்ளது. இந்த தர்காவில் கந்தூரி விழா ஆண்டுதோறும் மதநல்லிணக்கம், மனிதநேயத்துக்கும் எடுத்துக்காட்டும் விழாவாக நடைபெறுகிறது. தர்கா அமைந்துள்ள தெற்கு விஜயநாராயணத்தில் ஒரு முஸ்லிம்கள் வீடு கூட கிடையாது. அங்கு இந்து தேவர் சமூகத்து மக்கள் தான் வசித்து வருகிறார்கள். அப்போது கந்தூரி விழாவுக்கு தமிழ்நாடு, கேரளா மாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் முஸ்லிம்களுக்கு தங்கள் வீடுகளில் தங்குவதற்கு இடம் கொடுக்கிறார்கள். மேலும் கந்தூரி விழாவை முன்னின்று நடத்தி, கந்தூரி விழாவில் கலந்துகொள்ளும் முஸ்லிம் மக்களுக்கு தகுந்த பாதுகாப்பும் வழங்குகிறார்கள்.
கந்தூரி விழாபொதுவாக முஸ்லிம்கள் பிறையை கணக்கிட்டு தான் விழா நடத்துவார்கள். ஆனால் தெற்கு விஜயநாராயணத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 16–ந் தேதி தான் கந்தூரி விழா நடத்துகின்றனர். அதன்படி இந்த ஆண்டுக்கான கந்தூரி விழா நேற்று நடந்தது. காலையில் மேத்தபிள்ளையப்பா வாழ்ந்ததாக கூறப்படும் வீட்டில் இருந்து அலங்கரிக்கப்பட்ட யானை முன் செல்ல, திரளான முஸ்லிம்கள் பிறை கொடிகளை ஏந்திக் கொண்டு, நாரே தகுபீர், அல்லாகு அக்பர் என கோஷமிட்டவாறு ஊர்வலம் வந்தனர்.
முக்கிய வீதிகள் வழியாக சென்ற இந்த ஊர்வலம் தர்காவை வந்தடைந்தது. காலை 9.45 மணி அளவில் தர்காவில் கொடி ஏற்றப்பட்டு, பிறகு துவா நடைபெற்றது. ஊர்வலத்தில் கலந்துகொண்ட முஸ்லிம்கள் மேத்தபிள்ளையப்பாவுக்கு பிடித்தமான மல்லிகை பூ, வாழைப்பழம், அரிசி, கோழி, ஆடுகளை நேர்ச்சையாக படைத்தனர். பின்னர் மாலையில் அனைவருக்கும் கந்தூரி வழங்கப்பட்டது. இரவில் இன்னிசை நிகழ்ச்சிகள் நடந்தது.