ஆலங்குளம் அருகே பரிதாபம் டெங்கு காய்ச்சலுக்கு 10–ம் வகுப்பு மாணவர் பலி
ஆலங்குளம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 10–ம் வகுப்பு மாணவர் பலியானார்.
ஆலங்குளம்,
ஆலங்குளம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 10–ம் வகுப்பு மாணவர் பலியானார்.
10–ம் வகுப்பு மாணவர்நெல்லை மாவட்டம் ஆலங்குளம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பொதுமக்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் ஆலங்குளம் அருகே உள்ள குறிப்பன்குளம் இசக்கி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சண்முகம். விவசாயி. அவருடைய மகன் முத்துவேல் ராஜன் (வயது 16). ஆலங்குளம் அருகே நல்லூரில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 10–ம் வகுப்பு படித்து வந்தார்.
அவருக்கு கடந்த ஒரு வாரமாக டெங்கு காய்ச்சல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் குறிப்பன்குளம் அருகே உள்ள நெட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவரை பரிசோரித்த டாக்டர்கள், அவரது ரத்த மாதிரிகளை பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
பரிதாப சாவுஆனால் 2 நாட்களுக்கு முன்னர் முத்துவேல் ராஜனுக்கு காய்ச்சல் அதிகமானதால் ஆலங்குளத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் முத்துவேல் ராஜன் பரிதாபமாக இறந்தார்.
சண்முகத்துக்கு 5 மகள்கள். ஒரே ஒரு மகன். தங்களது ஒரே மகனையும் டெங்கு காய்ச்சலுக்கு பறிகொடுத்து விட்டு பெற்றோர் கண்ணீர் விட்டு கதறி அழுத காட்சி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.