என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர் போராட்டம் நீடிப்பு: தொழிற்சங்க நிர்வாகிகளுடன் மாவட்ட வருவாய் அதிகாரி பேச்சுவார்த்தை
என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர் போராட்டம் தொடர்பாக தொழிற்சங்க நிர்வாகிகளுடன் மாவட்ட வருவாய் அதிகாரி விஜயா பேச்சுவார்த்தை நடத்தினார்.
கடலூர்,
நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இவர்களுக்கு மாதத்துக்கு 26 நாட்கள் வேலை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் என்.எல்.சி. சுரங்கம் 1 ஏ–வில் மின்னியல் மற்றும் எஸ்.எம்.டி. பகுதியில் வேலை செய்யும் ஒப்பந்த தொழிலாளர்களின் பணி நாட்கள் 19 ஆக குறைக்கப்படும் என என்.எல்.சி. நிர்வாகம் அறிவித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 12–ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக புதுச்சேரியில் நடைபெற்ற 2–ம் கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்படவில்லை. இதனால் ஒப்பந்த தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் நேற்று 21–வது நாளாக நீடித்தது.
இந்த நிலையில் என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக மாவட்ட வருவாய் அதிகாரி விஜயா நேற்று தொழிற்சங்க நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
கடலூர் சப்–கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் சப்–கலெக்டர் ஜானிடாம் வர்க்கீஸ், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(நிலம் எடுப்பு) உமாமகேஷ்வரி ஆகியோரும் தொழிற்சங்க நிர்வாகிகள் தரப்பில் ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் எம்.சேகர், ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க நிர்வாகி அந்தோணி செல்வராஜ், என்.எல்.சி.க்கு வீடு நிலம் அளித்தோர் நலச்சங்க நிர்வாகிகள் ராயப்பன், பரமசிவம், பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் பழ.தாமரை கண்ணன், மாவட்ட செயலாளர் சண்.முத்துகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த பேச்சுவார்த்தைக்குப்பின் எம்.சேகர் நிருபர்களிடம் கூறியதாவது:–
என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் மாதத்துக்கு 26 ஷிப்ட் வேலை பார்த்து வந்ததை 19 ஆக குறைத்ததை கண்டித்து என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 21 நாட்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இது தொடர்பாக மாவட்ட வருவாய் அதிகாரி இன்று(அதாவதுநேற்று) என்.எல்.சி. தொழிற்சங்க நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த பேச்சுவார்த்தையில் ஏ.ஐ.டி.யு.சி., பாட்டாளி தொழிற்சங்கம், நிலம், வீடு அளித்தோர் நலசங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். இன்று(அதாவது நேற்று) மாலை என்.எல்.சி. அதிகாரிகளை அழைத்து பேசுவதாகவும், நாளை(அதாவது இன்று) மாலைக்குள் இறுதி முடிவு எட்டப்படும் என்றும் அதிகாரிகள் உறுதி அளித்து உள்ளனர். அந்த முடிவுகளின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி நாங்கள்(தொழிற்சங்கங்கள்) முடிவு எடுப்போம். அதுவரை ஒப்பந்த தொழிலாளர்களின் காலவரையற்ற போராட்டம் தொடரும்.
இவ்வாறு எம்.சேகர் கூறினார்.