பெங்களூருவில் தற்கொலைக்கு முயன்ற கன்னட நடிகர் துருவ் சர்மா மரணம் மாரடைப்பால் உயிர் பிரிந்தது
பெங்களூருவில் தற்கொலைக்கு முயன்று உடல் உறுப்புகள் செயல் இழந்து சிகிச்சை பெற்று வந்த கன்னட நடிகர் துருவ் சர்மா மாரடைப்பு ஏற்பட்டு நேற்று மரணம் அடைந்தார்.
பெங்களூரு,
பெங்களூருவில் தற்கொலைக்கு முயன்று உடல் உறுப்புகள் செயல் இழந்து சிகிச்சை பெற்று வந்த கன்னட நடிகர் துருவ் சர்மா மாரடைப்பு ஏற்பட்டு நேற்று மரணம் அடைந்தார்.
கன்னட நடிகர் துருவ் சர்மாபெங்களூரு கோணனேகுண்டேயில் வசித்து வருபவர் சுரேஷ் சர்மா. தொழில்அதிபரான இவர் கன்னட திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். இவருடைய மகன் துருவ் சர்மா (வயது 37). வாய் பேச முடியாத இவருக்கு காது கேட்கும் திறனும் இல்லாமல் இருந்தது. இருப்பினும், மனம் தளராத இவர் கன்னட திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார்.
கடந்த 2007–ம் ஆண்டு அவர் ‘நிகஞ்சலி‘ எனும் கன்னட திரைப்படத்தின் மூலமாக நடிகராக திரையுலகுக்கு அடியெடுத்து வைத்தார். வாய் பேச முடியாதது மற்றும் காது கேட்கும் திறன் இல்லாத ஒருவர் திரைப்படத்தின் மெயின் நடிகராக சிறப்பாக நடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார். இவருடைய நடிப்பு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
மரணம்இந்த நிலையில், கடந்த 29–ந் தேதி துருவ் சர்மா திடீரென்று தனது வீட்டில் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதைதொடர்ந்து அவரை அவருடைய குடும்பத்தினர் மீட்டு ஹெப்பாலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். துருவ் சர்மா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று வீட்டில் மயங்கி விழுந்ததாக அவருடைய குடும்பத்தினர் டாக்டர்களிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து, அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும், அவருடைய உடல் உறுப்புகள் செயல் இழந்து வந்தன. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 3 மணியளவில் மருத்துவமனையில் துருவ் சர்மா மரணம் அடைந்தார். திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் அவருடைய உயிர் பிரிந்ததாக டாக்டர்கள் கூறினர்.
இரங்கல்இதுகுறித்து, கோணனேகுண்டே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே, துருவ் சர்மாவின் மரணத்துக்கு கன்னட நடிகர் சுதீப், நடிகை பிரியாமணி உள்பட பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
மரணம் அடைந்த துருவ் சர்மா ‘நினந்ரே இஸ்டா கானோ‘, ‘திப்பாஜி சர்க்கிள்‘ உள்ளிட்ட பல்வேறு கன்னட திரைப்படங்களில் நடித்து உள்ளார். மலையாள மொழியில் ‘ஹிட் லிஸ்ட்‘ எனும் படத்திலும் அவர் நடித்து இருக்கிறார்.
இறந்துபோன துருவ் சர்மாவுக்கு திருமணம் ஆகி மனைவி, 2 குழந்தைகளும் உள்ளனர்.
--–
(பாக்ஸ்) மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் கொண்டவர், நடிகர் துருவ் சர்மா. கிரிக்கெட் வீரரான இவர் பல்வேறு கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். வாய் பேச முடியாதவர்–காது கேட்கும் திறன் இல்லாத மாற்றுத்திறனாளிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்பட்ட துருவ் சர்மா கடந்த 2005–ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் விளையாடினார். அவருடைய தலைமையில் இந்திய அணி உலககோப்பை வென்றது.
மேலும், சி.சி.எல். எனும் கிரிக்கெட் போட்டியில் கன்னட நடிகர்கள் அடங்கிய ‘கர்நாடக புல்டோசர்ஸ்‘ கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக செயல்பட்ட அவர் தனது பேட்டிங் திறமையால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.