கும்மிடிப்பூண்டியில் லாரிகள் மோதல்; 2 பேர் பலி


கும்மிடிப்பூண்டியில் லாரிகள் மோதல்; 2 பேர் பலி
x
தினத்தந்தி 2 Aug 2017 4:30 AM IST (Updated: 2 Aug 2017 1:05 AM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டியில் லாரிகள் மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள்.

கும்மிடிப்பூண்டி,

சென்னையில் இருந்து ஆந்திர மாநிலம் சிலுக்கலூர்பேட்டை நோக்கி சமையல் எண்ணெய்  ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று கும்மிடிப்பூண்டி வழியாக நேற்று அதிகாலை சென்று கொண்டிருந்தது. கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையில் சிப்காட் மேம்பாலத்தின் மீது மேற்கண்ட டேங்கர் லாரி செல்லும்போது, அதே திசையில் ஆந்திரா நோக்கி கரி ஏற்றிச்சென்ற லாரியின் பின்னால் டேங்கர் லாரி எதிர்பாராதவிதமாக மோதியது. 

இதில் டேங்கர் லாரி டிரைவரான ஆந்திர மாநிலம் சிலுக்கலூர்பேட்டையை சேர்ந்த பக்கீர் (வயது 42) மற்றும் அதில் பயணம் செய்த கிளீனர் ரியாஸ் (32) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்துக்கு காரணமான கரி ஏற்றி வந்த லாரியுடன்  டிரைவர் தப்பிச்சென்று விட்டார். விபத்தில் பலியான 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு  அனுப்பி வைக்கப்பட்டது. 

இது குறித்து சப்–இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேற்கண்ட விபத்தால் சென்னை–கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மற்றொரு விபத்து

காஞ்சீபுரத்தை அடுத்த கம்மவார்பாளையத்தை சேர்ந்தவர் சரவணன் (35). நெல் வியாபாரி. இவர் காஞ்சீபுரத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் கம்மவார்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். ஏரிவாக்கம் அருகே சரவணன் சென்று கொண்டிருந்தபோது அரக்கோணத்தில் இருந்து காஞ்சீபுரம் வந்த ஒரு மினி வேன் அவரது மோட்டார் சைக்கிளின் மீது பயங்கரமாக மோதியது. இதில் சரவணன் தூக்கி வீசப்பட்டு அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து  காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Next Story