புஞ்சைபுளியம்பட்டி அருகே 3 ரோடுகள் சந்திப்பில் டிராக்டர்களை நிறுத்தி விவசாயிகள் சாலை மறியல்


புஞ்சைபுளியம்பட்டி அருகே 3 ரோடுகள் சந்திப்பில் டிராக்டர்களை நிறுத்தி விவசாயிகள் சாலை மறியல்
x
தினத்தந்தி 2 Aug 2017 3:45 AM IST (Updated: 2 Aug 2017 1:18 AM IST)
t-max-icont-min-icon

புஞ்சைபுளியம்பட்டி அருகே குளத்தில் வண்டல் மண் அள்ள அனுமதிக்க வேண்டி 3 ரோடுகள் சந்திப்பில் டிராக்டர்களை நிறுத்தி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புஞ்சைபுளியம்பட்டி,

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள காவிலிபாளையத்தில் 140 ஏக்கர் பரப்பளவில் குளம் உள்ளது. தற்போது தண்ணீர் இல்லாமல் குளம் வறண்டு கிடப்பதால் விவசாயிகள் வண்டல் மண் அள்ள சத்தி தாசில்தார் புகழேந்தியிடம் கோரிக்கை விடுத்து வந்தார்கள். சிலருக்கு ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. பலர் விண்ணப்பித்தும் அனுமதி அளிக்கப்படவில்லை என்று தெரியவருகிறது.

அனுமதி அளிக்கப்பட்ட விவசாயி ஒருவர் 15 நாட்களுக்கு 30 லோடு மண் அள்ளிக்கொள்ளவேண்டும். ஆனால் காவிலிபாளையத்தில் இருந்து அதிக தூரத்தில் உள்ள விவசாயிகள் 30 லோடு வண்டல் மண்ணை 15 நாட்களுக்குள் அள்ள முடியாது என்பதால் ஏற்கனவே பெற்ற அனுமதி கடிதத்தை நகல் எடுத்து அதன் மூலம் வண்டல் மண் அள்ளிவந்ததாக தெரிகிறது.

இதுபற்றி தகவல் அறிந்ததும், சத்தி தாசில்தார் புகழேந்தி நேற்று முன்தினம் காவிலிபாளையம் குளத்தில் அனுமதியின்றி மண் அள்ளிக்கொண்டு இருந்த 2 டிராக்டர்களை பறிமுதல் செய்தார். அதனால் விவசாயிகள் ஒன்று திரண்டு சத்தி தாசில்தார் அலுவலகம் சென்று முற்றுகையிட்டார்கள். அப்போது புகழேந்தி விவசாயிகளுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தாமல் சென்றுவிட்டார். அப்போது விவசாயிகள் ‘காவிலிபாளையம் குளத்தில் நாங்கள் வண்டல் மண் அள்ள அனுமதிக்கவேண்டும். இல்லை என்றால் அனுமதி பெறாமலேயே மண் எடுப்போம். போராட்டமும் நடத்துவோம்‘ என்று கூறிச்சென்றார்கள்.

இந்தநிலையில் நேற்று காலை 10.30 மணி அளவில் காவிலிபாளையம், கண்டிசாலை, கோடப்பாளையம், கொண்டையம்பாளையம், வரப்பாளையம் பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் காவிலிபாளையம் புதுப்பாலம் அருகே ஒன்று திரண்டார்கள். பின்னர் அவர்கள் 50–க்கும் மேற்பட்ட டிராக்டர்களை புளியம்பட்டி–காவிலிபாளையம், காவிலிபாளையம்–சத்தி, காவிலிபாளையம்– நம்பியூர் செல்லும் 3 ரோடுகள் சந்திப்பில் நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டார்கள். இதனால் அந்த வழியாக எந்த வாகனமும் செல்ல முடியவில்லை.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் புஞ்சைபுளியம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் போலீசாருடன் காவிலிபாளையம் சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஆனால் விவசாயிகள் ‘சம்பவ இடத்துக்கு சத்தி தாசில்தார் புகழேந்தி வரவேண்டும். நாங்கள் காவிலிபாளையம் குளத்தில் வண்டல் அள்ளிக்கொள்ள அனுமதி கடிதம் வழங்கவேண்டும்‘ என்றார்கள்.

போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்படாததால், 3 ரோடுகள் வழியாக செல்ல முடியாமல் நின்ற வாகனங்களை போலீசார் மாற்றுப்பாதையில் திருப்பிவிட்டனர். இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் ரோட்டிலேயே சமைத்து சாப்பிட்டார்கள். இதற்கிடையே சத்தி தாசில்தார் புகழேந்தி, துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி ஆகியோர் சம்பவ இடம் வந்து விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது புகழேந்தி விவசாயிகளிடம், ‘காவிலிபாளையம் குளத்தில் வண்டல் மண் இல்லை என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். அவர்கள் வந்து ஆய்வு செய்தபிறகு அனுமதி தருகிறோம்‘ என்றார்கள். ஆனால் விவசாயிகள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அதன்பின்னர் மாலை 3 மணி அளவில் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் காவிலிபாளையம் குளத்தை வந்து பார்வையிட்டார்கள். பின்னர் நாளை (அதாவது இன்று) முதல் குளத்தில் இருந்து வண்டல் மண் அள்ளிக்கொள்ளலாம் என்று அனுமதி அளித்தார்கள். மேலும் தாசில்தார் புகழேந்தியிடம் புதியதாக அதற்கு விண்ணப்பம் வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். அதை விவசாயிகள் ஏற்றுக்கொண்டு மாலை 4 மணி அளவில் சாலை மறியலை கைவிட்டு நடுரோட்டில் நிறுத்தியிருந்த டிராக்டரை ஓட்டிச்சென்றார்கள்.


Next Story