கல்லட்டி மலைப்பாதையில் 200 அடி பள்ளத்தில் விழுந்து உயிருக்கு போராடிய தொழிலாளி உயிருடன் மீட்பு


கல்லட்டி மலைப்பாதையில் 200 அடி பள்ளத்தில் விழுந்து உயிருக்கு போராடிய தொழிலாளி உயிருடன் மீட்பு
x
தினத்தந்தி 2 Aug 2017 5:00 AM IST (Updated: 2 Aug 2017 1:35 AM IST)
t-max-icont-min-icon

கல்லட்டி மலைப்பாதையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் 200 அடி பள்ளத்தில் விழுந்த தொழிலாளி 25 மணி நேரத்துக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டார்.

மசினகுடி,

ஊட்டியில் இருந்து தலைக்குந்தா வழியாக முதுமலைக்கு செல்லும் சாலையில் உள்ள கல்லட்டி மலைப்பாதை. 36 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட இந்த மலைப்பாதை மிகவும் செங்குத்தாக அமைந்துள்ளது.

கர்நாடகா, கேரளா மற்றும் வடமாநிலங்களில் இருந்து வருபவர்கள் குறைந்த நேரத்தில் ஊட்டிக்கு வர முடியும் என்பதால் அதிகமான வாகன ஓட்டிகள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இந்த மலைப்பாதையில் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.

கர்நாடகா மாநிலம் மைசூருவை சேர்ந்தவர் சோட்டோ சாப் (வயது 45). இரு சக்கர வாகன பணிமனையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் ஊட்டிக்கு வந்து விட்டு நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு மைசூருவுக்கு தனது மோட்டார் சைக்கிளில் கல்லட்டி மலைப்பாதை வழியாக சென்று கொண்டிருந்தார். 30–வது கொண்டை ஊசி வளைவில் சென்று கொண்டிருந்த போது அவரது பின்னால் வந்த அடையாளம் தெரியாத கார் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நின்றாமல் சென்று விட்டது.

இதனால் சோட்டோ சாப் தனது மோட்டார் சைக்கிளோடு, 200 அடி பள்ளத்தில் விழுந்தார். இதில் அவர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அவரது கைகள், கால்கள் முறிந்தததால் அவரால் எழுந்து நடக்க முடியவில்லை. படுகாயம் அமடந்த சோட்டோ சாப் யாரேனும் உதவி செய்யுமாறு சத்தமிட்டுள்ளார். ஆனால் அவரது சத்தம் யாருக்கும் கேட்காததால் படுகாயங்களுடன் தொடர்ந்து அதே இடத்தில் படுத்துள்ளார். இரவு முழுவதும் அதே இடத்தில் உயிருக்கு போராடியவாறு இருந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை கல்லட்டி மலைப்பாதை வழியாக சென்ற சில சுற்றுலா பயணிகள் 30–வது கொண்டை ஊசி வளைவில் வாகனத்தை நிறுத்தி இயற்கையை பாரத்து ரசித்துள்ளனர். அப்போது அங்கிருந்த பள்ளத்தாக்கில் ஒருவர் படுத்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்ததுடன் உடனடியாக போலீசுக்கும், ஆம்புலன்சுக்கும் தகவல் கொடுத்தனர்.

இதைத்தொடர்ந்து ஆம்புலன்ஸ் வாகனத்தில் வந்தவர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பள்ளத்தில் இறங்கி உயிருக்கு போராடி கொண்டிருந்த சோட்ட சாபை காலை 11 மணி அளவில் மீட்டு ஊட்டி தலைமை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மைசூரு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

இது குறித்து புதுமந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற காரை யார்? ஓட்டிச்சென்றது என விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லட்டி மலைப்பாதையில் ஏற்பட்ட விபத்தில் படுகாயம் அடைந்த தொழிலாளி 25 மணி நேரத்துக்கு பின்னர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story