மத்திய மந்திரிகளை சந்திக்க நாராயணசாமி–அமைச்சர்கள் டெல்லி பயணம்


மத்திய மந்திரிகளை சந்திக்க நாராயணசாமி–அமைச்சர்கள் டெல்லி பயணம்
x
தினத்தந்தி 2 Aug 2017 4:45 AM IST (Updated: 2 Aug 2017 1:54 AM IST)
t-max-icont-min-icon

மத்திய மந்திரிகளை சந்தித்துப் பேசுவதற்காக முதல்–அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் டெல்லி சென்றுள்ளனர்.

புதுச்சேரி,

மருத்துவக்கல்லூரிகளில் மாணவர்களை நீட் தேர்வு முறையில் சேர்க்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த முறையை பின்பற்றுவதன் மூலம் புதுச்சேரி மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே நீட் தேர்வு முறையில் இருந்து விலக்கு அளித்து மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களை சேர்க்கும் நடைமுறையே நீடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

ஆனால் இந்த கோரிக்கை ஏற்கப்படாமல் நீட் தேர்வை நடத்தி அதில் தேர்ச்சி பெற்ற மாணவர்களே சென்டாக் மூலமாக மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கப்பட்டனர். இந்தநிலையில் மருத்துவ மேற்படிப்புக்காக சேர்க்கப்பட்ட 95 மாணவர்களை விடுவிக்க வேண்டும் என்று புதுவையில் உள்ள 7 தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அகில இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. இது மாணவர்கள் (டாக்டர்கள்) மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதுமட்டுமில்லாமல் புதுவை மாநிலத்திற்கு திட்டமில்லா செலவினத்துக்கான நிதியை உயர்த்தித்தர வேண்டும் என்ற கோரிக்கை மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. புதுவை விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி, வாரிய தலைவர்கள் பதவி நீட்டிப்பு போன்ற கோப்புகளை கவர்னர் கிரண்பெடி மத்திய அரசுக்கு அனுப்பிவிட்டார்.

எனவே இதுதொடர்பான விவகாரங்களில் தீர்வு காண புதுவை அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதையொட்டி முதல்–அமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள் மல்லாடிகிருஷ்ணராவ், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன் ஆகியோர் நேற்று டெல்லி புறப்பட்டு சென்றனர். அமைச்சர் நமச்சிவாயம் இன்று (புதன்கிழமை) டெல்லி செல்கிறார்.

இந்த கோரிக்கைகள் தொடர்பாக அவர்கள் டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா, உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங், நிதி மந்திரி அருண்ஜெட்லி ஆகியோரை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளனர். இதில் முக்கிய பிரச்சினையாக நீட் தேர்வில் இருந்து புதுச்சேரி மாநிலத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதில் முனைப்பு காட்டுவார்கள் என்று கூறப்படுகிறது.


Next Story