மதுரை உண்ணாவிரதத்தில் பங்கேற்பதற்காக தடையை மீறி செல்ல முயன்ற கொளத்தூர் மணி கைது
மதுரையில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்பதற்காக தடையை மீறி செல்ல முயன்ற கொளத்தூர் மணி உள்பட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல்,
ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக உத்தரவிட கோரி வக்கீல்கள், தமிழ் ஆர்வலர்கள் மதுரை காளவாசலில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பங்கேற்பதற்காக, திராவிட விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி சேலம் மேட்டூரில் இருந்து மதுரைக்கு காரில் புறப்பட்டார்.
இதற்கிடையே கொளத்தூர் மணி மதுரை வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில அமைப்பினர் அங்கு மறியலில் ஈடுபட்டனர். இதனால் அவரை மதுரை செல்ல விடாமல் தடுக்க போலீசார் திட்டமிட்டனர். இதற்காக திண்டுக்கல்–மதுரை மாவட்ட எல்லையான பள்ளப்பட்டி பிரிவு அருகே நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
நேற்று காலை 11.30 மணி அளவில் கொளத்தூர் மணி மற்றும் அவருடைய ஆதரவாளர்களின் கார்கள் பள்ளப்பட்டி பிரிவுக்கு வந்தபோது அதனை போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும் மதுரைக்கு செல்ல தடை விதித்திருப்பதாக கொளத்தூர் மணியிடம் போலீசார் தெரிவித்தனர்.
அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி, திரும்பி செல்லுமாறு கூறினார்கள். மீறி செல்லமுயன்றால் கைது செய்வோம் எனவும் போலீசார் தெரிவித்தனர் ஆனால், மதுரை போலீஸ் கமிஷனரின் அனுமதி பெற்று செல்வதாக கூறி அங்கேயே அவர் காத்திருந்தார். பிற்பகல் 3 மணி வரையிலும் கொளத்தூர் மணியை மதுரை செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை.
இதையடுத்து கொளத்தூர் மணி போலீசாரின் தடையை மீறி மதுரை செல்ல முயன்றார். இதனால் கொளத்தூர் மணி உள்பட 50 பேரை போலீசார் கைது செய்தனர். பின்பு அவர்களை கொடைரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்து, விடுவித்தனர்.