பணி பாதுகாப்பு வழங்கக்கோரி ரெயில்வே ‘கூட்ஷெட்’ தொழிலாளர்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம்


பணி பாதுகாப்பு வழங்கக்கோரி ரெயில்வே ‘கூட்ஷெட்’ தொழிலாளர்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 2 Aug 2017 4:15 AM IST (Updated: 2 Aug 2017 2:07 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் நேற்று ரெயில்வே ‘கூட்ஷெட்’ தொழிலாளர்கள் பணி பாதுகாப்பு வழங்கக்கோரி குடும்பத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல்,

நாமக்கல் ரெயில் நிலையத்தில் கடந்த வாரம் சரக்கு ரெயிலில் இருந்து மூட்டைகளை இறக்குவது தொடர்பாக சி.ஐ.டி.யு. மற்றும் பாரதீய மஸ்தூர் தொழிற்சங்கத்தினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் பாரதீய மஸ்தூர் தொழிற்சங்கத்தை சேர்ந்த 16 பேர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தை சேர்ந்த 9 தொழிலாளர்களை கைது செய்தனர்.

இதற்கிடையே இந்த பிரச்சினை தொடர்பாக நாமக்கல் தாசில்தார் ராஜகோபால் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையின் போது 31-ந் தேதி வரை ரெயிலில் வரும் சரக்குகளை சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தை சேர்ந்த 55 சதவீதம் பேர், பாரதீய மஸ்தூர் தொழிற்சங்கத்தை சேர்ந்த 45 சதவீதம் பேர் என பிரித்து இறக்கி கொள்ள வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் நேற்று கடந்த 5 ஆண்டுகளாக வேலை செய்து வரும் ‘கூட்ஷெட்’ தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பு மற்றும் சட்ட பாதுகாப்பு வழங்ககோரி சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்துடன் இணைக்கப்பட்ட நாமக்கல் ரெயில்வே ‘கூட்ஷெட்’ தொழிலாளர் சங்கத்தினர் நாமக்கல் பூங்கா சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் சிங்காரம், மாவட்ட செயலாளர் வேலுசாமி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ரங்கசாமி, சுமை பணி தொழிலாளர் சம்மேளன உதவி செயலாளர் கோவிந்தன், மாநில பொதுச்செயலாளர் வெங்கடபதி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நாமக்கல் ரெயில்வே ‘கூட்ஷெட்’ தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகள் சரவணன், புஷ்பராஜ் மற்றும் உறுப்பினர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முடிவில் சி.ஐ.டி.யு. மாவட்ட உதவி செயலாளர் சிவராஜ் நன்றி கூறினார்.


Next Story