பொதுமக்கள் போராட்டத்தால் மதுக்கடை மூடப்பட்டது


பொதுமக்கள் போராட்டத்தால் மதுக்கடை மூடப்பட்டது
x
தினத்தந்தி 2 Aug 2017 4:15 AM IST (Updated: 2 Aug 2017 2:09 AM IST)
t-max-icont-min-icon

குமாரபாளையம் அருகே பொதுமக்கள் நடத்திய போராட்டத்தால் மதுக்கடை மூடப்பட்டது.

குமாரபாளையம்,

குமாரபாளையம் அருகே உள்ள தட்டாங்குட்டை பஞ்சாயத்து அன்னை செட்டியார் நகருக்கும், தட்டாங்குட்டை அருந்ததியர் காலனிக்கும் இடையில் ஒரு அரசு மதுக்கடை செயல்பட்டு வந்தது.

இந்த பகுதியில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த மதுக்கடை முக்கிய இடத்தில் உள்ளதால் எந்நேரமும் கடையில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் பெண்கள், முதியவர்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகளுக்கு இந்த மதுக்கடை அச்சுறுத்தலாக உள்ளது என்றும், எனவே மதுக்கடையை அகற்றவேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் மதுக்கடை அகற்றப்படவில்லை.

மூடப்பட்டது

இந்த நிலையில் நேற்று காலை சுமார் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மதுக்கடை இருக்கும் இடத்தின் அருகே திரண்டனர். இந்த மதுக்கடையால் பெண்கள், மாணவ, மாணவிகள் மிகுந்த அச்சத்துடனேயே செல்ல வேண்டியது உள்ளது. எனவே மதுக்கடையை மூடவேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி, போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

இதுகுறித்து தகவல் அறிந்த குமாரபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுத்தேவன், தாசில்தார் ரகுநாதன், வருவாய் ஆய்வாளர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார், அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் இந்த மதுக்கடை உடனடியாக மூடப்படும் என்றும், மீண்டும் இந்த இடத்தில் கடை திறக்கப்படாது என்றும் அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது. 

Related Tags :
Next Story