அமைச்சரின் உதவியாளர் மனைவியிடம் சங்கிலி பறிப்பு கொள்ளையர்கள் அட்டூழியம்


அமைச்சரின் உதவியாளர் மனைவியிடம் சங்கிலி பறிப்பு கொள்ளையர்கள் அட்டூழியம்
x
தினத்தந்தி 2 Aug 2017 6:00 AM IST (Updated: 2 Aug 2017 2:10 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் அமைச்சரின் உதவியாளர் மனைவியிடம் தங்க சங்கிலி பறிக்கப்பட்டது.

சென்னை,

சென்னையில் நேற்று முன்தினம் மாலை டி.பி.சத்திரம் பகுதியில் 2 பெண்களிடமும், வேப்பேரி பகுதியில் ஒரு பெண்ணிடமும், மயிலாப்பூரில் ஒரு பெண்ணிடமும் கொள்ளையர்கள் நகைகளை பறித்துச் சென்றனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டார்கள். சென்னை டி.பி.சத்திரம் 8-வது குறுக்கு தெருவில் வசிக்கும் கோமதி (வயது 36) என்ற பெண்ணிடம் அவரது வீட்டின் அருகில் 4 பவுன் தங்க சங்கிலி பறிக்கப்பட்டது.

அதே டி.பி.சத்திரம் பகுதியில் அண்ணாநகர் கிழக்கு ஆர்.வி.நகரைச் சேர்ந்த சூர்யபிரபா (36) என்ற பெண்ணிடம் 4 பவுன் தங்க சங்கிலி கொள்ளையடிக்கப்பட்டது. இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பாக டி.பி.சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

அமைச்சரின் உதவியாளர் மனைவி

கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலை, முத்துசோலை என்ற தெருவில் வசிக்கும் லோகநாயகி (43) என்ற ஆசிரியை வேப்பேரி ரித்தர்டன் சாலையில் நடந்து செல்லும்போது மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையர்களிடம் 5 பவுன் தங்க சங்கிலியை பறி கொடுத்தார். இதுதொடர்பாக வேப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கொள்ளையர்களின் உச்சக் கட்ட அட்டூழியமாக அமைச்சர் ஒருவரின் உதவியாளர் மனைவியிடமே தங்க சங்கிலியை பறித்துச் சென்றுவிட்டனர். அமைச்சரின் உதவியாளரின் பெயர் இருதயராஜ். இவரது மனைவி பெயர் மேரிகவிதா (32). இவர்கள் மயிலாப்பூர் குயில்தோட்டம் 21-வது தெருவில் வசிக்கிறார்கள்.

இருதயராஜ் தனது மனைவி மேரிகவிதாவோடு நேற்று முன்தினம் மாலையில் சாந்தோம் நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அவர்களை பின்தொடர்ந்து இன்னொரு மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையர்கள் இருவர் மின்னல் வேகத்தில் மேரி கவிதாவின் கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர்.

இதுதொடர்பாக மயிலாப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதுபோல் அடுத்தடுத்து பெண்களிடம் நகைக் கொள்ளையில் ஈடுபட்ட ஆசாமிகள் போலீஸ் கையில் பிடிபடாமல் தப்பிச் சென்றுவிட்டனர். நகைகளை பறி கொடுத்தவர்களும் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் காலதாமதமாக சென்று புகார் கொடுத்தனர்.

போலீஸ் கட்டுப்பாட்டு அறை

இதுபோன்ற சந்தர்ப்பங்களில் நகைகளை பறி கொடுப்பவர்கள் உடனடியாக தங்கள் செல்போனில் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி எண் 100-ல் பேசி தகவல் கொடுக்க வேண்டும் என்றும், முடிந்தால் கொள்ளையர்கள் பயன்படுத்தும் மோட்டார் சைக்கிளின் நம்பரை தெரிவிக்க வேண்டும் என்றும் அவ்வாறு தெரிவிக்கும் பட்சத்தில் கொள்ளையர்களை பிடிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். 

Next Story