சுங்க கட்டண இழப்பீட்டில் பாதி தொகை சயான்–பன்வெல் நெடுஞ்சாலை பழுதுபார்ப்பு பணிக்கு செலவிடப்படும்
சயான்–பன்வெல் நெடுஞ்சாலையின் தற்போதைய நிலைமை, சாலை கட்டுமான பணி மற்றும் சுங்க கட்டண வசூலில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து
மும்பை,
சயான்–பன்வெல் நெடுஞ்சாலையின் தற்போதைய நிலைமை, சாலை கட்டுமான பணி மற்றும் சுங்க கட்டண வசூலில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து நேற்று சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பதில் அளித்து கூறியதாவது:–
சாலைகளின் பராமரிப்புக்கும், பழுதுபார்க்கும் பணிக்கும் ஒப்பந்ததாரர் தான் பொறுப்பு. சாலை பழுதுபார்க்கும் பணியை பொதுப்பணித்துறையும் மேற்கொள்ளும். சுங்க கட்டண வசூலில் இருந்து பயணிகள் வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், ஒப்பந்ததாரர்களுக்கு மாநில அரசு குறிப்பிட்ட தொகையை இழப்பீடாக வழங்குகிறது. இந்த இழப்பீட்டில் பாதி தொகை சயான்–பன்வெல் நெடுஞ்சாலையை பழுதுபார்க்கும் பணிக்கு செலவிடப்படும்.
இவ்வாறு தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.
மேலும், சயான்– பன்வெல் நெடுஞ்சாலையை மேம்படுத்தும் பொருட்டு, விடப்பட்ட ஒப்பந்தத்தில் முறைகேடு அரங்கேறியதை ஒப்புக்கொண்ட அவர், இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.