ஆத்தூர் அருகே கோவிலுக்கு ஆடுகளுடன் வந்த மலை கிராம மாணவ-மாணவிகள்


ஆத்தூர் அருகே கோவிலுக்கு ஆடுகளுடன் வந்த மலை கிராம மாணவ-மாணவிகள்
x
தினத்தந்தி 2 Aug 2017 11:44 AM IST (Updated: 2 Aug 2017 11:44 AM IST)
t-max-icont-min-icon

ஆத்தூர் அருகே மலை கிராமத்தில் நடுநிலைப்பள்ளியை தரம் உயர்த்த கோரிக்கை விடுத்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

ஆத்தூர்,

இந்தநிலையில் பள்ளியை தரம் உயர்த்தாவிட்டால் ஆடு, மாடுகளை மேயக்க தான் செல்ல வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக மாணவ-மாணவிகள் நேற்று கோவிலுக்கு ஆடுகளுடன் வந்தனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பைத்தூர் ஊராட்சியில் தவளைப்பட்டி கிராமம் உள்ளது. இது மலை கிராமம் ஆகும். இங்கு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் மலை கிராமங்களான தவளைப்பட்டி, வானாபுரம், கல்லுக்கட்டு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 110 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

இந்த பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து முடித்த பின்னர் மேல் படிப்புக்கான சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பைத்தூருக்கோ அல்லது 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆத்தூருக்கோ வர வேண்டும். அவ்வாறு வருவதற்கு போதிய பஸ் வசதி இல்லை. இதனால் மாணவ-மாணவிகள் அவதிப்படுகின்றனர். எனவே நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்று மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 24-ந்தேதி முதல் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் மாணவ-மாணவிகள் இல்லாமல் பள்ளி வெறிச்சோடி கிடக்கிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி தவளைப்பட்டி கிராமத்துக்கு சென்றார். அங்கு மாணவ-மாணவிகளின் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று மாணவ-மாணவிகளின் பெற்றோர் உறுதியாக இருந்தனர்.

நேற்றும் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்லவில்லை. இந்த பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தாவிட்டால் நாங்கள் ஆடு, மாடு தான் மேய்க்க வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக பள்ளி அருகே உள்ள மாரியம்மன் கோவிலுக்கு ஆடுகளுடன் மாணவ-மாணவிகள் வந்தனர். காலை 9.30 மணியளவில் கோவிலுக்கு வந்த மாணவ-மாணவிகள் அங்கிருந்து 10 மணியளவில் வீட்டுக்கு திரும்பினர்.
தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

Next Story