இடி, மின்னலுடன் பலத்த மழை: செங்கத்தில் 98.8 மில்லி மீட்டர் பதிவானது


இடி, மின்னலுடன் பலத்த மழை: செங்கத்தில் 98.8 மில்லி மீட்டர் பதிவானது
x
தினத்தந்தி 2 Aug 2017 4:30 PM IST (Updated: 2 Aug 2017 3:23 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் நேற்று முன்தினம் இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக செங்கத்தில் 98.8 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் நேற்று முன்தினம் இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக செங்கத்தில் 98.8 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

திருவண்ணாமலையில் கடந்த சில தினங்களாக வெயில் வெளுத்து வாங்கி வந்தது. பகல் நேரங்களில் வெளியில் செல்ல முடியாத அளவுக்கு வெயில் கொளுத்தியதால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அவதிப்பட்டனர்.

மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள், விவசாயிகள் மழை வேண்டி பல்வேறு பூஜைகள் செய்தனர். இந்த நிலையில் கடந்த 28-ந் தேதி முதல் இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்து வருகிறது.

அதேபோல் நேற்று முன்தினம் இரவும் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மேலும் பலத்த காற்றும் வீசியது. இதனால் சாலையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. காந்தி ரோடு பகுதியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டதால் மழைநீர் சாலையில் தேங்கியது.

மேலும் தண்டராம்பட்டு செல்லும் சாலையில் உள்ள தாமரைகுளம் நிரம்பி வழிந்தது. இதனால் அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். அதுமட்டுமின்றி திருவண்ணாமலையில் சமீபத்தில் தூர்வாரப்பட்ட சில குளங்களில் ஓரளவுக்கு தண்ணீர் தேங்கி உள்ளது.

குபேர லிங்கம் கோவில் அருகில் உள்ள மலையில் இருந்து மழைநீர் செல்வதற்காக அமைக்கப்பட்டு உள்ள கால்வாய் தடுப்புகளில் நீண்ட நாட்களுக்கு பிறகு மழைநீர் கால்வாயில் உள்ள தடுப்புகளில் தேங்கியது. வறட்சியால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழை விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை அளித்து உள்ளது.

வாணாபுரம் மற்றும் அதனை சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மாலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த மழையினால் தென்முடியனூர் ஏரிக்கு தண்ணீர் வந்துள்ளது.

திருவண்ணாமலையில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

செங்கம்- 98.8, போளூர்- 81.8, சாத்தனூர் அணை- 54, திருவண்ணாமலை- 19.

Next Story