அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களின் ஓவியங்களை கண்காட்சியாக வைக்க வேண்டும்


அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களின் ஓவியங்களை கண்காட்சியாக வைக்க வேண்டும்
x
தினத்தந்தி 2 Aug 2017 5:30 PM IST (Updated: 2 Aug 2017 3:34 PM IST)
t-max-icont-min-icon

அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களின் ஓவியங்களை கண்காட்சியாக வைக்க வேண்டும் என ஓவிய ஆசிரியர்கள் சங்க சிறப்பு கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் ஜெயகுமார் பேசினார்.

செய்யாறு,

செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் செய்யாறு கல்வி மாவட்டத்தை சேர்ந்த அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் ஓவிய ஆசிரியர்களுக்கான சிறப்பு கூட்டம் நடந்தது. மாவட்ட கல்வி அலுவலர் ராஜேந்திரன் (பொறுப்பு) தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் ஆர்.சங்கரலிங்கம், பள்ளி துணை ஆய்வாளர் புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வி.ஜெயகுமார் கலந்து கொண்டு பேசியதாவது:-

தமிழகத்தில் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு மேலாகியுள்ளது. இவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க திட்டமிட்டு வருகிறோம். அதன்படி தற்போது ஆயத்த கூட்டம் நடக்கிறது.

மாணவர்களின் ஆற்றலை வெளிப்படுத்த கூடிய ஓவிய கண்காட்சியை பள்ளி அளவில் நடத்த வேண்டும். பள்ளியில் நிரந்தரமாக தனியாக அறையை ஒதுக்கி மாணவர்களின் படைப்புகள், ஓவிய ஆசிரியரின் படைப்புகள் இடம்பெற செய்து கண்காட்சி அமைக்க வேண்டும்.

முக்கிய தினங்களில் பொதுமக்களை பார்வையிட செய்து அரசுப்பள்ளியில் மாணவர்களை சேர்ந்திடும் வகையில் எண்ணத்தை உருவாக்க வேண்டும். மாவட்ட அளவிலான நிரந்தர ஓவிய கண்காட்சி அமைக்கப்படும். அதில் உங்களின் படைப்புகளை இடம்பெற செய்ய வேண்டும்.

மாணவர்களை ஓவியத்திறன் மிக்கவர்களாக மாற்ற வேண்டும். ஓவியத்தில் ஆர்வத்தை தூண்டும்போது மற்ற பாடங்களில் தானாகவே ஆர்வம் ஏற்பட்டு படிக்க கூடும். 10-ம் வகுப்பிற்கு கண்டிப்பாக ஓவிய பாடம் எடுக்க வேண்டும். அதற்காக வாரத்திற்கு 2 பாடவேளைகளை தலைமை ஆசிரியர் ஒதுக்க வேண்டும். அதேபோல உடற்கல்விக்கும் 2 பாடவேளைகளை ஒதுக்க வேண்டும்.

மாணவர்களை மாநில அளவிலான ஓவியப் போட்டிகளில் பங்கேற்க செய்ய வேண்டும். தேசிய அளவில் நடக்கும் கலைத்திருவிழாவில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர்களை பங்கேற்க செய்ய வேண்டும். பகுதி நேர சிறப்பாசிரியர்கள் பணிநிரந்தரம் குறித்து தமிழக அரசு பரிசீலனையில் உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து செய்யாறு கல்வி மாவட்டத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ஓவிய ஆசிரியர்கள் ஓவியப்படைப்புகள் கண்காட்சியாக வைக்கப்பட்டதை முதன்மை கல்வி அலுவலர் வி.ஜெயகுமார் பார்வையிட்டு ஓவியத்தின் தன்மை, எவற்றால் வரையப்பட்ட ஓவியம், வரைய எடுத்துகொண்ட நேரம் முதலியவற்றை ஆர்வத்துடன் கேட்டு பாராட்டினார்.

Next Story