பெண் காவலர் பணிக்கான உடற்தகுதி தேர்வு 810 பேர் பங்கேற்பு


பெண் காவலர் பணிக்கான உடற்தகுதி தேர்வு 810 பேர் பங்கேற்பு
x
தினத்தந்தி 3 Aug 2017 3:45 AM IST (Updated: 2 Aug 2017 7:55 PM IST)
t-max-icont-min-icon

மழை காரணமாக பெண் காவலர் பணிக்கான உடற்தகுதி தேர்வு 2 இடங்களில் நடந்தது. இதில் 810 பேர் கலந்துகொண்டனர்.

வேலூர்,

தமிழக சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் நடந்த காவல்துறை, தீயணைப்பு துறை மற்றும் சிறைக்காவலர் பணிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்ற வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கான உடற்தகுதி தேர்வு வேலூர் நேதாஜி விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.

4,584 ஆண்கள், 1,544 பெண்களுக்கு உடற்தகுதி தேர்வு நடைபெறுகிறது. இதில் முதல் கட்டமாக ஆண்களுக்கான உடற்தகுதி தேர்வு 6 நாட்கள் நடைபெற்றது. அவர்களுக்கான உடற்தகுதி தேர்வு முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று பெண்களுக்கான உடற்தகுதி தேர்வு தொடங்கியது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இதனால் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் தண்ணீர் தேங்கியது. இதன் காரணமாக உடற்தகுதி தேர்வு பாதிக்கப்பட்டது. வடக்கு மண்டல ஐ.ஜி.செந்தாமரை கண்ணன், வேலூர் சரக டி.ஐ.ஜி. வனிதா ஆகியோர் நேற்று காலை விளையாட்டு மைதானத்தை பார்வையிட்டனர்.

அப்போது தண்ணீர் தேங்கியிருந்ததால் பெண்களுக்கான ஓட்டத்தை வேறு இடத்தில் நடத்த முடிவு செய்தனர். அதன்படி, கோட்டைக்குள் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்திற்கு மாறப்பட்டது. முதல் நாளான நேற்று 1,000 பெண்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவர்களில் 810 பேர் கலந்துகொண்டனர்.

அவர்களுக்கு நேதாஜி விளையாட்டு மைதானத்தில் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு உயரம் மட்டும் அளக்கப்பட்டது. அதில் தேர்வானவர்கள் போலீஸ் வேன் மூலம் கோட்டைக்குள் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு பகலவன் மேற்பார்வையில் பெண்களுக்கான ஓட்டம் நடத்தப்பட்டது.

Related Tags :
Next Story