செய்யாறு, நாகநதி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு


செய்யாறு, நாகநதி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு
x
தினத்தந்தி 3 Aug 2017 3:45 AM IST (Updated: 2 Aug 2017 8:28 PM IST)
t-max-icont-min-icon

செய்யாறு, நாகநிதி ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சேத்துப்பட்டு,

சேத்துப்பட்டு ஒன்றியம் கார்ணாம்பாடி கிராமத்தில் உள்ள ஏரியில் கடந்த சில நாட்களாக தாய் திட்டத்தின்கீழ் ரூ.25 லட்சம் மதிப்பில் கரை பலப்படுத்தும் பணி மற்றும் மதகு அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. ஏரி, மதகு அமைக்கும் வழியாக ஏரிக்கு வந்த மழைநீர் அனைத்தும் வெளியேறியது. வெளியேறிய மழைநீர் அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்தது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘ஏரி, மதகு அமைக்கும் பணி தாமதமாக நடந்து வருகிறது. இப்பணியை சேத்துப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன் பார்வையிடவில்லை. மதகு அமைக்கும் பணியின் போது முன்எச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தால் ஏரியில் இருந்து மழைநீர் வெளியேறி விளை நிலங்களுக்குள் புகுந்திருக்காது. மழைநீர் வெளியேறியது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலருக்கு தகவல் தெரிவித்தும் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிடவில்லை. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

போளூரில் பெய்த மழையினால் போளூர் பெரிய ஏரி மற்றும் குளங்கள் உள்பட நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. மழையால் போளூர் அரியாத்தூரை சேர்ந்த சந்திரன், பிச்சாண்டி, ஆத்துவாம்பாடியை சேர்ந்த தருமன் ஆகியோரின் விவசாய நிலத்தில் உள்ள கிணற்றின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.

மேலும் கொரல்பாக்கம் கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை என்பவரின் ஓட்டு வீடு இடிந்து விழுந்தது. அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏற்படவில்லை. மழையின் காரணமாக கரைப்பூண்டி கிராமத்தின் அருகே உள்ள செய்யாறு ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

திருவண்ணாமலை – வேலூர் சாலை கடந்த சில மாதங்களாக விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதனால் மல்லவாடி, நாயுடுமங்கலம் பகுதிகளில் தரைப்பாலம் புதிதாக அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக அங்கு தற்காலிக சாலைகள் அமைக்கப்பட்டிருந்தன.

மழையின் காரணமாக தற்காலிக சாலைகளில் மண் அரிப்பு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் அங்கு மழைநீர் தேங்கியதால் மல்லவாடி பகுதியில் ஒரு லாரி கவிழ்ந்தது. அதே பகுதியில் ஒரு லாரி சேற்றில் சிக்கியது. நாயுடுமங்கலத்தில் அமைக்கப்பட்டு வரும் தரைப்பாலத்தில் அதிக பாரம் ஏற்றிச்சென்ற லாரி சேற்றில் சிக்கிக்கொண்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிரேன் உதவியுடன் லாரிகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர்.

திருவண்ணாமலை தாமரைநகர் 2–வது தெருவில் உள்ள புளியமரம் திடீரென விழுந்தது. இதனால் அப்பகுதியில் உள்ள வீட்டின் காம்பவுண்டு சுவர் இடிந்தது.

திருவண்ணாமலையை அடுத்த சொரகொளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் சுற்றுச்சுவர் மழையின் காரணமாக இடிந்து விழுந்தது.

கண்ணமங்கலம் பகுதியில் ஓடும் நாகநதி ஆறு ஜவ்வாது மலைத்தொடரில் உருவாகிறது. மழையின் காரணமாக நாகநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story