போலி நம்பர் ஒட்டி மணல் ஏற்ற வந்த 2 லாரிகள் பறிமுதல் டிரைவர்கள் உள்பட 4 பேர் கைது


போலி நம்பர் ஒட்டி மணல் ஏற்ற வந்த 2 லாரிகள் பறிமுதல் டிரைவர்கள் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 3 Aug 2017 3:45 AM IST (Updated: 2 Aug 2017 11:54 PM IST)
t-max-icont-min-icon

கல்லக்குடி அருகே போலி நம்பர் ஒட்டி மணல் ஏற்ற வந்த 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக டிரைவர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கல்லக்குடி,

திருச்சி மாவட்டம் கல்லக்குடி அருகே விராலூரில் மணல் குவாரி உள்ளது. இந்த குவாரியில் ஆன்லைன் மூலம் மணல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று இரவு 7 மணி அளவில் மணல் ஏற்ற லாரிகள் வந்தன. இதில் 2 லாரிகளின் பதிவு எண் மீது புள்ளம்பாடி வருவாய் துறை ஆய்வாளர் லோபோ, கல்லக்குடி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் ஆகியோருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த 2 லாரிகளை சோதனையிட்டனர்.

அப்போது போலி பதிவு எண்ணை நம்பர் பிளேட்டில் ஒட்டி வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். பின்னர் நடத்திய விசாரணையில் இந்த இரண்டு லாரிகளும் நெல்லை மாவட்டத்தில் இருந்து கொண்டு வரப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து போலி பதிவு எண் ஒட்டி வந்த 2 லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டு கல்லக்குடி போலீஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டது.

4 பேர் கைது

இது தொடர்பாக திருச்சி பொதுப்பணித்துறை உட்கோட்ட பொறியாளர் ரமேஷ் கல்லக்குடி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் பறிமுதல் செய்யப்பட்ட லாரிகளை ஓட்டி வந்த நெல்லை மாவட்டம் பாலாமடை கட்டளை கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுக கனி(வயது30), தாழையூத்தைச் சேர்ந்த பழனி(31) மற்றும் கிளீனர்கள் கரிசூழ்ந்த மங்கலம் நாகராஜன்(21), சங்கர்நகர் மனோகர்(28) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து லால்குடி குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story