ஊராட்சி அலுவலகம் எதிரே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் காத்திருப்பு போராட்டம்


ஊராட்சி அலுவலகம் எதிரே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 3 Aug 2017 4:15 AM IST (Updated: 2 Aug 2017 11:55 PM IST)
t-max-icont-min-icon

ஆவூர் ஊராட்சி அலுவலகம் எதிரே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆவூர்,

விராலிமலை ஒன்றியம், ஆவூரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு 4 தெருக்கள் உள்ளன. வடக்குத்தெரு தவிர மற்ற 3 தெருக்களில் கடந்த ஒரு மாதமாக சரியான குடிநீர் வினியோகம் செய்யப்பட்டவில்லை. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் நேற்று காலை வடக்குத்தெருவில் ஒரு இடத்தில் காவிரி குடிநீர் வழங்க குழாய் பதிப்பதற்கான பணி நடைபெற்று கொண்டிருந்தது. இதையறிந்த அப்பகுதியை சேர்ந்த மற்ற 3 தெருக்களை சேர்ந்த பொதுமக்கள் எங்கள் பகுதிக்கு கடந்த ஒரு மாதமாக குடிநீர் சரியாக வினியோகம் செய்யப்படவில்லை. முறையாக குடிநீர் வழங்கும் வடக்குத்தெருவிற்கு மட்டும் தற்போது காவிரிநீர் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டு வருவது குறித்து ஊராட்சி செயலாளரிடம் கூறி, அந்த பணியை செய்ய விடாமல் தடுத்தனர்.

இதைத்தொடர்ந்து ஆவூர் முன்னாள் ஊராட்சி உறுப்பினர் மரியா தலைமையில் அப்பகுதி சேர்ந்த 100–க்கும் மேற்பட்ட பெண்கள் ஊராட்சி அலுவலகம் எதிரே காலிக்குடங்களுடன் குடிநீர் வழங்கக்கோரி காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

இது குறித்து தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராஜ் தொலைபேசி மூலம் இன்னும் ஒரு வாரத்தில் குடிநீர் வினியோகம் செய்யப்படாத பகுதிகளுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் உறுதியளித்தார். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், எங்கள் பகுதிக்கு சரியான குடிநீர் வழங்காத மாவட்ட நிர்வாகம் ஆவூரில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சரக்கு மட்டும் தட்டுப்பாடு இல்லாமல் எப்படி அனுப்புகின்றனர். எனவே வருகிற 9–ந்தேதிக்குள் எங்கள் பகுதிக்கு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சாலை மறியலில் ஈடுபடுவோம். மேலும் ஆவூரில் உள்ள டாஸ்மாக் கடையை மூடுவதற்கும் போராட்டம் நடத்துவோம் என்று கூறினர்.


Next Story