குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்


குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 3 Aug 2017 4:30 AM IST (Updated: 3 Aug 2017 1:08 AM IST)
t-max-icont-min-icon

தோகைமலை அருகே குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்கக் கோரி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல் செய்தனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தோகைமலை,

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே உள்ள தெலுங்கபட்டியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக ஆழ்குழாய் கிணறு மூலம் குடிநீர் தொட்டி அமைத்தும், கூடுதலாக காவிரி குடிநீரும் வழங்கப்பட்டு வந்தது.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியால் ஆழ்குழாய் கிணற்றில் தண்ணீர் குறைந்து போனது. மேலும், கடந்த 10 நாட்களாக மின்மோட்டார்களும் பழுதானதால் குடிநீர் கிடைக்கவில்லை. காவிரி குடிநீரும் கடந்த சில நாட்களாக வரவில்லை. இதனால் தெலுங்கபட்டி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்கக்கோரி பொருந்தலூர் ஊராட்சி நிர்வாகத்திற்கும், தோகைமலை ஒன்றிய நிர்வாகத்தினரிடமும் பொதுமக்கள் புகார் தெரிவித்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்கக்கோரி குளித்தலை-மணப்பாறை சாலையில் தெலுங்கபட்டி பஸ் நிறுத்தம் அருகே காலிக்குடங்களுடன் நேற்று காலை 8 மணி அளவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த ஒன்றிய ஆணையர்கள் பன்னீர்செல்வம், விஜயகுமார், தோகைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜ்மோகன் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தெலுங்கபட்டி பகுதியில் உள்ள ஆழ்குழாய்களை ஆழப்படுத்தி, புதிதாக மின் மோட்டார்கள் பொருத்தப்படும். மேலும் குடிநீர் தொட்டி அருகே 10 குடிநீர் குழாய்கள் அமைத்து குடிநீர் வழங்கப்படும் என்று அதிகாரிகள் பொதுமக்களிடம் உறுதி அளித்தனர். இதில் சமரசமடைந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் நேற்று காலை 8 மணி முதல் காலை 10 மணி வரை 2 மணி நேரம் குளித்தலை-மணப்பாறை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Related Tags :
Next Story