ஊட்டியில் பிளஸ்–2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை


ஊட்டியில் பிளஸ்–2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 3 Aug 2017 3:45 AM IST (Updated: 3 Aug 2017 1:24 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் பிளஸ்–2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஊட்டி,

ஊட்டி காந்தல் முக்கோணம் பகுதியை சேர்ந்தவர் வசந்தகுமார். இவர் ஊட்டியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் வேலை செய்து வருகிறார். இவரது மகன் சுமித் கிரி பைரவன் (17). இவர் ஊட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை சுமித் பள்ளிக்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டு சென்றார். ஆனால் அவர் பள்ளிக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த உறவினர்கள், சுமித்தை ஊட்டியில் உள்ள பல்வேறு இடங்களில் தேடி உள்ளனர்.

அப்போது சிலர் ஊட்டி படகு இல்லம் அருகே உள்ள வனப்பகுதிக்குள் சுமித் சென்றதாக தெரிவித்தனர். இதையடுத்து அப்பகுதியில் உறவினர்கள் தேடியபோது, அங்குள்ள ஒரு மரத்தில் தூக்கில் சுமித்தின் பிணம் தொங்கி கொண்டு இருந்தது. அதனை பார்த்த அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர்.

இதுபற்றி தகவல் அறிந்த ஊட்டி நகர மேற்கு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். சுமித்தை பள்ளியில் படித்து வரும் சக மாணவர்கள், அவரது பெயர் குறித்து கிண்டல் செய்ததாக தெரிகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த சுமித் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து ஊட்டி நகர மேற்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். ஊட்டியில் பிளஸ்–2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story