திண்டுக்கல் மாநகராட்சி மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய கிணறுகளை தூர்வார வேண்டும்
திண்டுக்கல் மாநகராட்சி மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய கிணறுகளை தூர்வாரும்படி கலெக்டர் டி.ஜி.வினய் உத்தரவிட்டுள்ளார்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் குடிநீர் வினியோகம் தொடர்பான ஆய்வுக் கூட்டம், கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் நடந்தது. அப்போது நகர மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய திறந்தவெளி கிணறுகளை தூர்வாரி பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து திண்டுக்கல் நகரில் உள்ள கிணறுகளை கலெக்டர் டி.ஜி.வினய் ஆய்வு செய்தார்.
அதன்படி நாகல்நகர், ஆர்.எம்.காலனி, முத்தழகுபட்டி, ஒய்.எம்.ஆர்.பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளை கிணறுகளை கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது நீரூற்று காணப்படும் திறந்தவெளி கிணறுகளை தூர்வார வேண்டும். திறந்தவெளி கிணறுகளில் கிடைக்கும் தண்ணீரின் தரத்தை ஆய்வு செய்து, மக்களுக்கு வழங்கும்படி மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதுகுறித்து கலெக்டர் டி.ஜி.வினய் கூறுகையில், திறந்தவெளி கிணறுகளை தூர்வாரியும், புதிதாக ஆழ்துளை கிணறுகள் அமைத்தும் மக்களுக்கு சீரான முறையில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மாநகராட்சி பகுதியில் வறட்சி நிவாரண நிதியில் முதல்கட்டமாக மின்மோட்டாருடன் கூடிய 15 ஆழ்துளை கிணறுகளும், 2–வது கட்டமாக 38 ஆழ்துளை கிணறுகளும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. இன்னும் 5 ஆழ்துளை கிணறுகள் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும், என்றார்.
இந்த ஆய்வின் போது மாநகராட்சி கமிஷனர் மனோகர், பொறியாளர் கணேசன், நகரமைப்பு அலுவலர் கோபாலகிருஷ்ணன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர் பிரபுராம் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.