கோவை மாவட்டத்தில் 80 சதவீத சுகாதார பணிகள் செய்யப்படுவதில்லை
கோவை மாவட்டத்தில் 80 சதவீத சுகாதார பணிகள் செய்யப்படுவதில்லை என்று தி.மு.க. எம்.எல்.ஏ. கார்த்திக் குற்றம் சாட்டினார்.
கோவை,
கோவை மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் கோவை மாநகர் தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், எம்.எல்.ஏ.வுமான நா.கார்த்திக் கோவை அரசு ஆஸ்பத்திரியில் நேற்று ஆய்வு நடத்தினார். அவர் டெங்கு வார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களை சந்தித்து சிகிச்சை தொடர்பாக கேட்டறிந்தார். பின்னர் அவர், நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றி டீன் அசோகன் மற்றும் இருப்பிட மருத்துவ அதிகாரி சவுந்தரவேல் ஆகியோரிடம் கேட்டறிந்தார்.
இதையடுத்து நா.கார்த்திக் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:–
கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் மற்றும் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கோவை ஆஸ்பத்திரியில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். கோவை மாநகராட்சியை பொறுத்தவரை சுகாதாரம் சீர்கெட்டு உள்ளது. இதனால் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
பக்கத்து மாநிலமான கேரளாவில் இருந்து டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் பேர் இங்கு வருவதாக ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் கூறினார்கள். இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கோவை மாநகராட்சியை பொறுத்தவரை குப்பைகள் அகற்றப்படாமலும், சாக்கடை கழிவுகள் தூர்வாரப்படாமலும் உள்ளது. கோவை மாநகராட்சியின் செயல்பாடுகள் மிக மிக மோசமான நிலையில் உள்ளது. கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 80 சதவீத சுகாதார பணிகள் மேற் கொள்ளப்படுவதில்லை. எனவே போர்க்கால அடிப்படையில் உள்ளாட்சித்துறையும், சுகாதாரத்துறையும் இணைந்து துப்புரவு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்,
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது, மாநகர் வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் முத்துசாமி, பகுதி செயலாளர் மு.ரா.செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் கோவிந்தராஜ், மா.செல்வராஜ், தண்டபாணி, சசிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.