கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி சிவசேனா கட்சியினர் 15 பேர் கைது


கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி சிவசேனா கட்சியினர் 15 பேர் கைது
x
தினத்தந்தி 3 Aug 2017 4:30 AM IST (Updated: 3 Aug 2017 1:53 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற சிவசேனா கட்சியினர் 15 பேரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்,

கேரள மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் ராஜேஷ் படுகொலை செய்யப்பட்டார். இதைக்கண்டித்து கேரள மாநிலத்தில் போராட்டங்கள் நடைபெற்றன. இந்த நிலையில் ராஜேஷ் படுகொலையை கண்டித்து சிவசேனா கட்சி சார்பில் தஞ்சையில் உள்ள கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர்.

அதன்படி சிவசேனா கட்சியின் மாநில இணை பொதுச்செயலாளர் கணேஷ்பாபு தலைமையில் மாவட்ட தலைவர் ராஜா, இந்து இளைஞர் எழுச்சி பேரவை நிறுவன தலைவர் பழ.சந்தோஷ்குமார் முன்னிலையில் சிவசேனா கட்சியினர் தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே திரண்டனர்.

பின்னர் அவர்கள் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தை நோக்கி செல்ல முயன்றனர். அப்போது அங்கு வந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர்கள் சாலையில் அமர்ந்து கேரளாவில் ராஜேஷ் கொலைக்கு காரணமான கம்யூனிஸ்டு கட்சியை தடை செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

இதில் இந்து இளைஞர் எழுச்சி பேரவை மாநில செயலாளர் செல்வசரவணன், சிவசேனா கட்சியின் மாவட்ட துணைத்தலைவர்கள் வேலு, சபரி, பாலசுப்பிரமணியன், இளைஞரணி நிர்வாகிகள் காளிதாஸ், விநாயகம், சாய்பிரசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 15 பேரையும் போலீசார் கைது செய்தனர். 

Related Tags :
Next Story