காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதை நிறுத்த கோரி மண்டியாவில் விவசாயிகள் அரைக்கால் சட்டை அணிந்து ஊர்வலம்


காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதை நிறுத்த கோரி மண்டியாவில் விவசாயிகள் அரைக்கால் சட்டை அணிந்து ஊர்வலம்
x
தினத்தந்தி 3 Aug 2017 2:00 AM IST (Updated: 3 Aug 2017 1:54 AM IST)
t-max-icont-min-icon

காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதை நிறுத்த கோரி மண்டியாவில் விவசாயிகள், அரைக்கால் சட்டை அணிந்து ஊர்வலம் நடத்தினர்.

மண்டியா,

காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதை நிறுத்த கோரி மண்டியாவில் விவசாயிகள், அரைக்கால் சட்டை அணிந்து ஊர்வலம் நடத்தினர். பெண்களும் கையில் துடைப்பத்துடன் ஊர்வலமாக சென்றனர்.

காவிரி நடுவர் மன்றம் உத்தரவு


கர்நாடகத்தில் தற்போது பருவமழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆறு உற்பத்தியாகும் குடகு மாவட்டம் தலைக்காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நிலையில் காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதை நிறுத்த கோரி காவிரி ஆற்றின் கரையோர மாவட்டங்களான மண்டியா, மைசூரு, சாம்ராஜ்நகரில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மைசூருவில் நிருபர்களுக்கு பேட்டியளித்த முதல்-மந்திரி சித்தராமையா காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் உத்தரவுப்படி தான் காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. தண்ணீர் திறப்பை நிறுத்தினால், நீதிமன்றத்துக்கு மாநில அரசு பதில் சொல்ல வேண்டிய நிலை வரும். இதனால் யார் சொன்னாலும் காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதை நிறுத்த முடியாது என்று கூறினார்.

கால்வாய்களில் தண்ணீர் திறக்க மறுப்பு

மேலும் கபினி, ஹாரங்கி அணைகளில் நீர் குறைவாக உள்ளதால், விவசாயத்திற்கு கால்வாய்களில் தண்ணீர் திறக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதை நிறுத்த முடியாது என்றும், விவசாயத்திற்கு கால்வாய்களில் தண்ணீர் திறந்து விட முடியாது என்றும் கூறிய முதல்-மந்திரி சித்தராமையாவை கண்டித்து மண்டியா, மைசூருவில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அரைக்கால் சட்டை அணிந்து ஊர்வலம்

இதேப்போல் நேற்று முன்தினமும் மண்டியா மாவட்டம் மத்தூர் தாலுகா தேசிஹள்ளி பகுதியில் காவிரி ஆற்றின் கரையோரம் கன்னட அமைப்பினரும், விவசாயிகளும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். அப்போது விவசாயிகள் மொட்டை அடித்து முதல்-மந்திரி சித்தராமையா, நீர்ப்பாசனத்துறை மந்திரி எம்.பி.பட்டீலுக்கு திதியும் கொடுத்து நூதன முறையில் போராட்டம் நடத்தினார்கள்.

இந்த நிலையில் நேற்றும் காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதை நிறுத்த கோரி விவசாயிகளும், பெண்களும் மண்டியா டவுன் நல்வாடி கிருஷ்ணராஜ உடையார் சர்க்கிள் முன்பு பெங்களூரு-மைசூரு சாலையில் போராட்டம் நடத்தினர். அப்போது விவசாயிகள் அரைக்கால் சட்டை அணிந்து கொண்டும், பெண்கள் கையில் துடைப்பத்தை வைத்து கொண்டும் ஊர்வலமாக சென்றனர். அப்போது காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதை உடனடியாக மாநில அரசு நிறுத்த வேண்டும் என்று கோஷங்களையும் எழுப்பினார்கள். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பரபரப்பு

இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்த மண்டியா டவுன் போலீசார் அங்கு விரைந்து வந்து போக்குவரத்தை சீர்செய்தனர். பின்னர் போராட்டம் நடத்திய விவசாயிகள், பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டம் நடத்திய விவசாயிகள் தங்களின் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story