போலி பதிவு எண் பயன்படுத்தி லாரியில் மணல் கடத்தல்; டிரைவர் கைது
பென்னாகரத்தில் போலி பதிவு எண் பயன்படுத்தி லாரியில் மணல் கடத்திய லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
பென்னாகரம்,
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் லாரியில் போலி பதிவு எண் பயன்படுத்தி மணல் கடத்துவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க அவர் பென்னாகரம் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் பென்னாகரம் போலீசார் அப்பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அந்த லாரியில் 3 யூனில் மணல் இருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து லாரி டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில் அவர் பென்னாகரம் அருகே உள்ள சின்னவத்தலாபுரத்தை சேர்ந்த டிரைவர் சரவணன் (வயது 35) என்பதும், திருச்சியில் இருந்து பென்னாகரத்திற்கு மணல் கடத்தி வந்ததும் தெரியவந்தது.
மேலும் அவர் ஓட்டி வந்த லாரியின் பதிவு எண் போலி என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து மணலுடன், லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியின் உரிமையாளரான ரசாக் என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர்.