கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் உறுப்பினர்கள் சேர்க்கை கூட்டம்


கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் உறுப்பினர்கள் சேர்க்கை கூட்டம்
x
தினத்தந்தி 3 Aug 2017 4:00 AM IST (Updated: 3 Aug 2017 2:13 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் ஆலோசனை கூட்டம் நடந்தது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரியில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சியின் ஊடக பிரிவு செய்தி தொடர்பாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான விஷ்ணுபிரசாத் கலந்து கொண்டு பேசியதாவது:–

மத்தியில் பா.ஜனதா அரசு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக மீறி செயல்பட்டு வருகிறது. காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம், தகவல் அறியும் உரிமை சட்டம், கிராமப்புற மின் மயமாக்கல் திட்டம், பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், குடிநீர் திட்டங்களால் ஏழை, எளிய மக்கள் பயன் அடைந்தனர்.

ஆனால் தற்போது பா.ஜனதா அரசு மக்கள் விரோத அரசாக செயல்பட்டு வருகிறது. ஒரே நாடு ஒரே வரி என்று கூறிக் கொண்டு, ஜி.எஸ்.டி. வரிவிதிப்பில் பெட்ரோல், டீசலை சேர்க்காமல் மக்களை ஏமாற்றி வருகிறது. அத்தியாவசிய கியாஸ் மானியங்கள் வழங்கப்பட மாட்டாது என கூறுவது ஏழைகளுக்கு செய்யும் துரோகம் ஆகும். தற்போது பா.ஜனதா அரசு மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். அவர்களின் மக்கள் விரோத ஆட்சி குறித்து காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள், தெருக்கள் தோறும் விழிப்புணர்வு கூட்டத்தை நடத்தி எடுத்து கூற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து பல்வேறு கட்சிகளில் இருந்து 50 பேர் விலகி, விஷ்ணுகுமார் முன்பு காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் சுப்பிரமணியன், முன்னாள் மாவட்ட தலைவர் ஜேசு. துரைராஜ், நகர தலைவர் ரகமத்துல்லா, நிர்வாகிகள் ஆறுமுகம், சுப்பிரமணி, நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story