பட்டிவீரன்பட்டி அருகே தலைகுப்புற கவிழ்ந்த அரசு பஸ் 14 பேர் படுகாயம்


பட்டிவீரன்பட்டி அருகே தலைகுப்புற கவிழ்ந்த அரசு பஸ் 14 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 3 Aug 2017 12:30 PM IST (Updated: 3 Aug 2017 12:19 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து தேனி மாவட்டம் போடியை நோக்கி 70 பயணிகளை ஏற்றிக் கொண்டு ஒரு அரசு பஸ் புறப்பட்டது.

பட்டிவீரன்பட்டி,

அந்த பஸ்சை, ஆண்டிப்பட்டியை சேர்ந்த டிரைவர் பெருமாள் (வயது 49) ஓட்டினார். கண்டக்டராக கந்தசாமி இருந்தார். திண்டுக்கல்-வத்தலக்குண்டு தேசிய நெடுஞ்சாலையில் பட்டிவீரன்பட்டி அருகே சுந்தரராஜபுரம் பிரிவு என்ற இடத்தில் பஸ் சென்று கொண்டிருந்தது.

அப்போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் பஸ் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அலறினர். அவர்களின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் மீட்டனர். இந்த விபத்தில் டிரைவர் பெருமாள், கண்டக்டர் கந்தசாமி, கம்பத்தை சேர்ந்த முத்துராஜ் (42), போடியை சேர்ந்த ரஞ்சித்குமார் (24), கவுதமி (30) ஆகியோர் உள்பட 14 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களுக்கு வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து குறித்து தகவல் அறிந்த நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் கருப்புச்சாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story